search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி தலைமை செயலாளரை தாக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
    X

    டெல்லி தலைமை செயலாளரை தாக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

    டெல்லியில் தலைமை செயலாளராக இருக்கும் அன்ஷு பிரகாஷை தாக்கிய விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் தலைமை செயலாளராக இருக்கும் அன்ஷு பிரகாஷை தாக்கிய விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தலைமை செயலாளராக இருப்பவர் அன்ஷு பிரகாஷ். அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைச் செயலாளருக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த பிரச்சினையைத் தொடர்ந்து அங்கிருந்து நேராக கவர்னர் மாளிகைக்குச் சென்ற தலைமை செயலாளர், கவர்னர் அனில் பைஜாலிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட செய்தியில், ‘எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு தலைமைச் செயலாளர் பதில் அளிக்க மறுத்ததுடன், ஆளுநர் கேட்டால் மட்டுமே பதில் அளிப்பேன் என்று கூறினார். இப்போது பா.ஜ.க.வின் தூண்டுதலின் பேரில் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் தலைமை செயலாளராக இருக்கும் அன்ஷு பிரகாஷை தாக்கிய விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷை தாக்கிய வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் மீது புகார் வந்தது. இதையடுத்து, அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கைது செய்துள்ளோம். அருகிலுள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறோம் என்ற்னர்.
     
    டெல்லியில் 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கட்சிக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இடையே அதிகாரப் போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×