search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்பு பணத்தை பாதுகாக்க 2 புதிய மசோதா
    X

    வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்பு பணத்தை பாதுகாக்க 2 புதிய மசோதா

    வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தை பாதுகாக்கும் வகையில் 2 புதிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
    புதுடெல்லி:

    வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தை பாதுகாக்கும் வகையில் 2 புதிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது இந்த கூட்டத்தில், முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை சட்ட மசோதா மற்றும் சீட்டு நிறுவனங்கள் சட்டதிருத்த மசோதா (2018) ஆகியவற்றை வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை சட்ட மசோதா வங்கிகளில் கம்பெனிகள், நிறுவனங்கள் சட்டவிரோதமாக பணத்தை முதலீடு செய்து பின்னர் அதை எடுக்கும் மோசடியை தடுப்பதற்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது, இப்படி முதலீடு செய்யும் பணத்தை தடுப்பதற்கு வங்கிகளில் கடுமையான விதிமுறைகள் எதுவும் இல்லை. மேலும் இதன் மீதான வங்கி நிர்வாக நடவடிக்கைளும் குறைவாகவே உள்ளன.

    இந்த குறைபாடுகளை பல கம்பெனிகளும், நிறுவனங்களும் பயன்படுத்திக்கொண்டு முதலீடு செய்து பணத்தை பெறுவதால் இந்த புதிய சட்ட மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகளில் சட்டவிரோத முதலீடுகளை மேற்கொண்டு பணத்தை திரும்ப எடுப்பதற்கு பெரிய அளவில் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் சொத்துகளை முடக்கவும் இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.

    2-வது மசோதாவில், சீட்டு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுப்பதற்காக 1982-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘சிட் பண்ட்’ சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சீட்டு நிறுவனங்களில் பொதுமக்கள் பணத்தை சேமித்து ஏமாற்றப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும்.

    நேற்றைய மந்திரி சபை கூட்டத்தில், நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் முறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான நிலக்கரி சுரங்க சட்டம்(சிறப்பு ஒதுக்கீடு), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்(மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன்படி நிலக்கரி சுரங்க ஏலமுறையில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்படுவதுடன், இத்துறையில் தொழில் செய்வதும் எளிதாக்கப்படும். மேலும் இயற்கை வளங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

    கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த 204 நிலக்கரி சுரங்கங்களை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவின் காரணமாக இந்த புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×