search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் அக்‌ஷர்தாம் கோவிலில் கனடா பிரதமர் வழிபாடு
    X

    குஜராத் அக்‌ஷர்தாம் கோவிலில் கனடா பிரதமர் வழிபாடு

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குஜராத்தில் உள்ள அக்‌ஷர்தாம் கோவிலில் நேற்று வழிபாடு செய்தார்.
    காந்திநகர்:

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஒரு வார கால அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்திய தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது இந்திய பயணத்தின் போது பல்வேறு பகுதிகளையும் அவர் சுற்றிப்பார்க்கிறார்.

    அதன்படி அவர் தனது மனைவி சோபி மற்றும் 3 குழந்தைகளுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை நேற்று முன்தினம் சுற்றிப்பார்த்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இதற்காக காந்திநகர் வந்து இறங்கிய அவர்கள் நேராக ஆமதாபத்தில் உள்ள காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றனர். அங்கு காந்தியடிகள் தங்கியிருந்து, அகிம்சை இயக்கத்தை தொடங்கிய ஹிரிதய் கஞ்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தனர்.

    இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்திருந்த ஜஸ்டின் ட்ருடோ மற்றும் அவரது குடும்பத்தினர், ஆசிரமத்தில் வைக்கப்பட்டு இருந்த காந்தியடிகளின் ராட்டையில் நூல் நூற்றும் மகிழ்ந்தனர்.

    பின்னர் அங்கிருந்து காந்திநகரில் உள்ள அக்‌ஷர்தாம் கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் மலர்களை வைத்து வழிபாடு செய்தனர். சுமார் ½ மணி நேரத்தை கோவிலில் செலவிட்ட அவர்கள், பின்னர் அங்குள்ள அருங்காட்சியகம் மற்றும் சுற்றுப்புறங்களை சுற்றிப்பார்த்தனர். அங்கு குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    ‘என்னே ஒரு அசாதாரண அமைதி தவழும் இடம் இது. என்னுடன், எனது குடும்பத்தினருடன், உலகுடன் அமைதியை பகிர்ந்துகொள்வதற்காக நன்றி செலுத்துகிறேன்’ என கோவிலில் உள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் ஜஸ்டின் ட்ருடோ எழுதினார். இதைப்போல ‘ஒருமைத்தன்மையில்... சாந்தி’ என்று சோபி ட்ருடோ எழுதி வைத்தார்.

    முன்னதாக கோவிலுக்கு வந்த ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருக்கு கோவில் பூசாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    கடந்த ஆண்டு டோரண்டோவில் உள்ள அக்‌ஷர்தாம் கோவிலுக்கு ஜஸ்டின் ட்ருடோ சென்ற போது, காந்திநகர் கோவிலுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதை ஏற்று இந்த பயணத்தை அவர் மேற்கொண்டதாகவும் அக்‌ஷர்தாம் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×