search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை - கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி
    X

    காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை - கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி

    நாதுராம் கோட்சே சுட்ட நான்காவது தோட்டா தொடர்பாக மகாத்மா காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை கோரிய மனுவுடன் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும், ஆய்வாளருமான பங்கஜ் பத்னிஸ் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை மற்றும் அதன் பின்னணியில் சதி உள்ளதாகவும், அதுகுறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் அவர் கூறியிருந்தார்.

    ‘மகாத்மா காந்தி கொலை குறித்து விசாரித்த ஜே.எல். கபூர் கமிஷன், காந்தி கொலையின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த சதியையும் வெளிக்கொண்டு வரவில்லை. மகாத்மா காந்தியை நோக்கி கோட்சே சுட்டது மூன்று குண்டுகள்தான் என்று விசாரணை அறிக்கையில் உள்ளது. ஆனால், அவர் உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. எனவே, நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது என்பது குறித்து விசாரித்து கண்டறியப்பட வேண்டும்’ என்றும் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பத்னிஸ் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது, காந்தியை சுட்டதில் மற்றொரு நபரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என மனுதாரர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நாங்கள் அரசியலுக்குள் போக விரும்பவில்லை, சட்டப்படி போகவே விரும்புகிறோம். இப்போது ஏன் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

    அப்போது வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆதாரங்களை தாக்கல் செய்ய தயார் என்று மனுதாரர் தெரிவித்த நிலையில், அதற்காக தனியாக வேறு ஒரு மனுவை தாக்கல் செய்து சீலிட்ட உறையில் வைத்து தன்னிடம் உள்ள ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை தேவையா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். #Tamilnews
    Next Story
    ×