search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார், உ.பி. பாராளுமன்ற இடைத்தேர்தல்- பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
    X

    பீகார், உ.பி. பாராளுமன்ற இடைத்தேர்தல்- பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

    பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கு மார்ச் 11-ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதை தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். துணை முதல் மந்திரிகளாக கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர்.

    இவர்களில் யோகி ஆதித்யாநாத், கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தாங்கள் வகித்துவந்த பாராளுமன்ற மக்களவை பதவியை ராஜினாமா செய்துவிட்டு உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையின் மேலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், யோகி ஆதித்யாநாத் எம்.பி.யாக பதவி வகித்த கோரக்பூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் கேஷவ் பிரசாத் மவுரியாவின் புல்பூர் பாராளுமன்ற தொகுதி ஆகியவற்றுக்கு மார்ச் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    மேலும், பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா தொகுதிக்கும் இதே தேதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியின் எம்.பி.யாக பதவி வகித்த ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முஹம்மது தஸ்லிமுதீன் மரணத்தை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை இன்று அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் தொகுதியில் உபேந்திரா சுக்லா மற்றும் புல்பூர் தொகுதியில் வாரணாசி நகர முன்னாள் மேயர் கவுஷலேந்திரா சிங் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பீகார் மாநிலத்தின் அராரியா தொகுதியில் பிரதீப் சிங், மற்றும் பீகார் சட்டசபைக்குட்பட்ட பாபுவா தொகுதிக்கான இடைத்தேர்தலில் ரிங்கி பாண்டே ஆகியோரும் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேற்கண்ட தொகுதிகளில் 20-ம் தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 21-ம் தேதி நடைபெறும். தாக்கல் செய்த மனுக்களை திரும்பபெற 23-ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 11-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இரு பாராளுமன்ற தொகுதிகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்வியை தழுவிய நிலையில் மார்ச் 11-ம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரு பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல், அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தலைமையிலான ஆட்சியை எடைபோடும் தராசாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×