search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை பஞ்சாப் நே‌ஷனல் வங்கிக்கு சீல் வைப்பு - மேலும் ரூ.20 கோடி சொத்து முடக்கம்
    X

    மும்பை பஞ்சாப் நே‌ஷனல் வங்கிக்கு சீல் வைப்பு - மேலும் ரூ.20 கோடி சொத்து முடக்கம்

    ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக மும்பையில் உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் கிளையை ‘சீல்’ வைத்த நிலையில், மேலும் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. #NiravModiScam #PNBScam
    மும்பை:

    பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் ரூ.8000 கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார்.

    அவரை தொடர்ந்து தற்போது பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த வங்கியில் அவர் ரூ.11,700 கோடி மோசடி செய்துள்ளார். இதில் நிரவ் மோடியுடன் சேர்ந்து அவரது மனைவி அமீ மோடி, சகோதரர் நிஷால் மோடி, உறவினர் மெகுல் கோக்ஷி ஆகியோர் சம்மந்தப்பட்டுள்ளனர்.

    இவர்கள் நடத்திய வைர நிறுவனங்கள் மூலம் மும்பையில் உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கி ஊழியர்கள் உடந்தையுடன் இந்த மோசடி நடந்துள்ளது. இதில் சம்மந்தப்பட்ட நிரவ் மோடி உள்பட 4 பேரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர்.



    அவர் ‘ஸ்விப்ட்’ முறையில் நடைபெறும் பண மாற்றத்தை பயன்படுத்தி வங்கி அதிகாரிகள் உடந்தையுடன் இந்த மோசடியில் ஈடுபட்டதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    நிரவ் மோடிக்கு உடந்தையாக இருந்த பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, ஊழியர் மனோஜ்காரத், நிரவ் மோடி நிறுவனத்தில் அதிகாரபூர்வ கையெழுத்திடும் உரிமை பெற்ற அதிகாரி ஹேமந்த் பட் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய 4 பேரையும் சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்து இந்தியா கொண்டு வர தேவையான முயற்சிகளை சி.பி.ஐ. எடுத்து வருகிறது.

    இந்த மோசடி தொடர்பாக நாடு முழுவதும் உள்ள கீதாஞ்சலி நிறுவனங்களில் சோதனை நடத்தி சொத்துக்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த வங்கியில் மொத்தம் ரூ.11,700 கோடி மோசடி நடந்து இருக்கிறது என்று கூறினாலும், மோசடி பற்றி முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அனைத்து விவரங்களும் வெளியே வந்தால் மோசடி தொகை இன்னும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

    பெரும்பாலான மோசடி 2 மாதத்தில் தான் நடந்துள்ளது. என்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் இருந்து கண்டுபிடித்தனர். மேலும் பல்வேறு விதிமுறைகளை மீறிதான் இந்த மோசடி நடந்ததும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக மும்பையில் உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் கிளையை ‘சீல்’ வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். எம்.சி.கே. பிரேடி ஹவுசில் உள்ள கிளை சீல் வைக்கப்பட்டது. இந்த கிளையில் இருந்து தான் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தான் நிரவ் மோடியின் குழுமம் தொடர்புடைய நிறுவகங்களுக்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய பொதுத்துறை வங்கிகள் தாராளமாக வாரி வழங்கி இருக்கின்றன. ரூ.11,700 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ள இந்த கடன்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதால் அந்த கடன்களை திருப்பி செலுத்துவதற்கான பொறுப்பு பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் தலையில் விழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக பஞ்சாப் நே‌ஷனல் வங்கியை சேர்ந்த 11 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வங்கியில் மோசடியாக சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதால் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.



    வங்கி மோசடியின் ஒரு பகுதியாக பணம் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்ட 200 போலி கம்பெனிகளை அமலாக்கத்துறை கண்டறிந்து உள்ளன. இவை அனைத்தும் பண மோசடி செய்வதற்கும், பினாமி சொத்துக்களை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த மோசடி தொடர்பாக ஒரே நாளில் நாடு முழுவதும் 45 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். பெங்களூரில் 10 இடங்களிலும், டெல்லியில் 7 இடங்களிலும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் தலா 5 இடங்களிலும் சண்டிகார், ஐதராபாத் ஆகியவற்றில் தலா 4 இடங்களிலும், சென்னை பாட்னா, லக்னோ, கவுகாத்தியில் உள்ள சில இடங்களிலும், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    மேலும் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினார்கள். ஒட்டு மொத்தமாக ரூ.5,700 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது. #NiravModiScam #PunjabNationalBank #PNBFraud #PNBScam #PNBFraudCase
    Next Story
    ×