search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மோசடியால் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்
    X

    நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மோசடியால் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்

    நிரவ் மோடி மற்றும் உறவினர் மெகுல் சோக்ஷி கைவரிசையால் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    மும்பை:

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையை பயன்படுத்தி ரூ.11,400 கோடி பணப்பரிமாற்றம் மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியை சி.பி.ஐ. தேடி வருகிறது. அவர் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஷியும் வங்கியில் முறைகேடு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவரும் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். அவர்கள் இருவரும் 23-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோரது நிறுவனங்களில் வருமானவரித்துறையினரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள். 21 இடங்களில் நடந்த இந்த சோதனையில் சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள் கைபற்றப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

    நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி இருவரது பாஸ் போர்ட்களை முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இவர்கள் இருவரது பணப்பரிமாற்ற மோசடியால் இதர வங்கிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.

    நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் செய்யப்பட்டுள்ள ரூ.11,400 கோடி பணப்பரிமாற்ற மோசடி காரணமாக மற்ற வங்கிகளுக்கு ரூ.17,632 கோடி இழப்பு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வகையில் இந்த இழப்பு அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் கடந்த 4 ஆண்டுகளில் இத்தகைய முறைகேடுகள் காரணமாக 22 ஆயிரத்து 743 கோடி ரூபாயை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    நிரவ் மோடியின் நிறுவனங்கள் 32 வங்கிகளிடம் கடன் வாங்கி உள்ளன. இவற்றிலும் பல்வேறு மோசடிகள் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    நிரவ் மோடிக்கு இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் தொடங்கி சீனா வரை பல்வேறு நகை கடைகளும், நகை உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.

    இந்த நிறுவனத்துக்கு நிரவ் மோடியும் மற்ற பங்குதாரர்கள் 3 பேரும் சேர்ந்து ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்து இருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று அதையும் முதலீடு செய்து இருக்கிறார்கள். இதிலும் பல மோசடிகள் நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

    நிரவ் மோடி நிறுவனம் உலக அளவிலான பிரபலங்கள், தொழில் அதிபர்கள் போன்றவர்களுக்கும் பல கோடி மதிப்புள்ள நகைகளை தயாரித்து கொடுத்துள்ளது.

    அவர்களில் பலர் பாலிவுட் நடிகைகள் ஆவர். கேதே வின்ஸ்லெட், நவோமி வாட்ஸ் போன்றவர்களும் நிரவ் மோடி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.
    Next Story
    ×