search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் தீர்ப்பால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி - நடிகர் அம்ரிஷ் பேட்டி
    X

    காவிரி நீர் தீர்ப்பால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி - நடிகர் அம்ரிஷ் பேட்டி

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கர்நாடக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக நடிகர் அம்ரிஷ் தெரிவித்துள்ளார். #CauveryWater #CauveryVerdict #Karnataka
    பெங்களூர்:

    கன்னட நடிகர் அம்ரிஷ். இவர் ரஜினியின் நண்பர் ஆவார். அவருடன் ‘தாய்மீது சத்தியம்’, ‘பிரியா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை சுமலதாவை திருமணம் செய்து கொண்டார். கர்நாடகாவில் முன்னணி நடிகராக இருந்தார். பின்னர் காங்கிரசில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். மாண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய மந்திரி சபையிலும் இடம்பெற்றார்.

    கர்நாடக காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் உடல்நலம் குன்றியதாலும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். உடல்நலம் தேறிய பின்பு மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துள்ளார்.

    விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார். இது குறித்து நடிகர் அம்ரிசிடம் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா? முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படுவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அம்ரிஷ் கூறியதாவது:-

    நான் 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி வேட்பாளராகத்தான் இருக்கிறேன். சந்தர்ப்பமும், வாய்ப்பும் என்னைத் தேடி வந்தபோது ஒருபோதும் வேண்டாம் என்று நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த நம்பிக்கை நடைபெறவில்லை. என்னை காயப்படுத்திவிட்டார்கள்.

    எனது சொந்த தொகுதியான மாண்டியாவில் மீண்டும் போட்டியிடுவேன். அதைவிடுத்து வேறு தொகுதியில் போட்டியிடும் பேச்சுக்கே இடம் இல்லை. மாண்டியா தொகுதி மக்கள் தான் என்னை 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர். அவர்களை விட்டு நான் ஓடுவேனா? அப்படி செய்தால் என்னை கோழை என்று சொல்வார்கள்.

    தற்போது காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கொர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். பல ஆண்டுகளுக்கு பின் நமக்கு சாதகமான நல்ல தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. இப்போது தான் கர்நாடகத்தில் மூச்சுவிட காற்று கிடைத்து இருக்கிறது. கர்நாடகத்தில் காவிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக நானும் எனது மனைவி சுமலதாவும் நாளை (திங்கட்கிழமை) கிருஷ்ணாநகர் அணையில் பூஜை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் நண்பர் நடிகர் ரஜினிகாந்த் காவிரி தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளாரே என்று கேட்டதற்கு அம்ரிஷ் கூறுகையில், நான் எல்லோருக்கும் நண்பன் தான். அவர் (ரஜினிகாந்த்) நதிகளை இணைக்க வேண்டும் என்று சொன்னது நல்ல கருத்து. அதைதான் நானும் சொல்கிறேன் என்றார். #SupremeCourt #CauveryWater #CauveryVerdict #TamilNadu #Karnataka
    Next Story
    ×