search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானின் சாபஹார் துறைமுகத்தை இந்தியா இயக்குவது மேலும் 18 மாதங்கள் நீட்டிப்பு
    X

    ஈரானின் சாபஹார் துறைமுகத்தை இந்தியா இயக்குவது மேலும் 18 மாதங்கள் நீட்டிப்பு

    ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை தொடர்பு கொள்ளும் வகையில் ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தை கையாள மற்றும் இயக்க இந்தியாவின் ஒப்பந்தம் 18 மாந்தங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி டெல்லியில் நேற்று பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஆப்கன் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து, இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுகப் பணிகளின் இயக்கம் உள்பட 9 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, சாபஹார் துறைமுகத்தின் முதல்கட்டமான ஷாகித் பெஹேஷ்டி துறைமுகத்தில் தற்போதுள்ள வசதிகளை அடுத்த 18 மாதங்களுக்கு இயக்குவது மற்றும் கையாள்வது தொடர்பான ஒப்பந்தம், ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும், இந்தியாவின் போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

    பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இரு தலைவர்களும் கூட்டக பேட்டியளித்தனர். அப்போது, ஹசன் ரவுஹானி கூறியதாவது:-

    இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளும் முக்கியமான இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த அதேவேளையில், ஒரு விஷயத்தில் கூட நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

    100 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட, அமைதியை விரும்பும் நாடான இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் ஏன் அளிக்கப்படவில்லை? அமெரிக்கா அந்த அதிகாரத்தை அனுபவிப்பது எப்படி? அணுகுண்டுகளை வைத்துள்ள ஐந்து சக்தி வாய்ந்த நாடுகளுக்கு மட்டுமே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது ஏன்? ஈரானியர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க அமெரிக்கா முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் தொழில், வர்த்தகத்துக்கும் அப்பாற்பட்டு, வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளன. இரு நாடுகளும் ஒரேவிதமான வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவும் ஈரானும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

    இவ்வாறு ஹசன் ரவுஹானி கூறினார். முன்னதாக பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியா, ஈரான் ஆகிய இரு நாடுகளுமே பயங்கரவாதம் இல்லாத உலகையே விரும்புகின்றன. பயங்கரவாதம், போதை மருந்துக் கடத்தல், இணையவெளிக் குற்றங்கள் மற்றும் இதர சர்வதேசக் குற்றங்களை ஊக்குவிக்கும் சக்திகளின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த உறுதிபூண்டுள்ளன. 

    சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவது, ஆப்கானிஸ்தானையும் மத்திய ஆசியாவையும் சென்றடைய உதவும். சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதில் ஈரான் அதிபர் காட்டிய அக்கறை பாராட்டத்தக்கது 

    என்று அவர் பேசினார்.  #TamilNews
    Next Story
    ×