search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிபுரா சட்டசபை தேர்தல் - 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    திரிபுரா சட்டசபை தேர்தல் - 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

    60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். #TripuraElection2018
    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநில சட்டசபைக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. 60 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சியில் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக அக்கட்சி சார்பில் மாணிக் சர்கார் முதல்வராக இருந்து வருகின்றார்.

    மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க இங்கு ஆட்சியைப் பிடித்துவிட தீவிர முயற்ச்சி மேற்கொண்டது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. சாரிலாம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கு மட்டும் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து தங்களது கடமையை ஆற்ற வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வருகின்றனர். 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 25.7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

    மொத்தம் 3214 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 47 வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாக்குப்பதிவை ஒட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடான வங்காளதேசத்துடனான எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.  #TripuraElection2018 #TamilNews
    Next Story
    ×