search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நதிநீர் பங்கீட்டு விவகாரம் - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு
    X

    நதிநீர் பங்கீட்டு விவகாரம் - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு

    நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. #SupremeCourt #CauveryWater #CauveryVerdict #TamilNadu #Karnataka
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டி.எம்.சி.யில் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறி இருந்தது.

    மேலும் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தவும் உத்தரவிட்டு இருந்தது.

    இதுகுறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த முதல்-மந்திரி சித்தராமையா, சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல என்றும், கூட்டாட்சி தத்துவத்தின் படி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், காவிரி நதிநீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நேற்று பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் கூறிய கருத்துகளை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் எதிர்க்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் கர் நாடக அரசுக்கு உடன்பாடு இல்லை.

    ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தாலும், அது தன்னிச்சையான முடிவாக இருக்கக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முன்பாக 4 மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 4 மாநிலங்களின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்க வேண்டும். ஏதோ ஓரிரு மாநிலங்களின் கருத்துகளை கேட்டுவிட்டு மட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துவிடக்கூடாது.

    காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்று காலக்கெடு எதையும் சுப்ரீம் கோர்ட்டு விதிக்கவில்லை. இதுதொடர்பாக கர்நாடக வக்கீல்களுடன் நான் பேசினேன். அவர்களும் காலக்கெடு எதுவும் சுப்ரீம் கோர்ட்டு விதிக்கவில்லை என்று தான் கூறினார்கள். ஊடகங்களில் தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்திருப்பதாக தவறான செய்திகள் வந்துள்ளன.

    தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்வதுடன், வருமானம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நான் வரவேற்கிறேன்.”

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.  #SupremeCourt #CauveryWater #CauveryVerdict #TamilNadu #Karnataka  #tamilnews
    Next Story
    ×