search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ பட்ஜெட்டில் டாப்-5 பட்டியலில் இடம்பிடித்தது இந்தியா
    X

    ராணுவ பட்ஜெட்டில் டாப்-5 பட்டியலில் இடம்பிடித்தது இந்தியா

    ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. #IndiaArmy #DefenceBudget #Top5IntheWorld
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் தங்கள் பட்ஜெட்டில் ராணுவத்துக்காக பெரிய தொகையை ஒதுக்குகின்றன. இது தொடர்பான பட்டியலை சர்வதேச மூலாதார ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ‘ராணுவ ஒதுக்கீடு-2018’ என்ற புதிய பட்டியலை இந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் முதன் முறையாக ‘டாப் 5’ இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. அந்த நாடு 2017-ல் ராணுவத்துக்காக 40 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 10 லட்சம் கோடி ரூபாயுடன் சீனா 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சவுதி அரேபியா 4.90 லட்சம் கோடி ரூபாயுடன் 3-ம் இடத்தையும், 3.9 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ரஷியா 4-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்த பட்டியலில் இந்தியா 5-ம் இடத்தை பிடித்துள்ளது. 2017 பட்ஜெட்டில் ராணுவத்துக்கு இந்தியா 3.30 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது. இந்தாண்டு பட்ஜெட்டில், இதை விட 2.4 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது. இங்கிலாந்து கடந்த ஆண்டு 5-ம் இடத்தில் இருந்தது. தற்போது இங்கிலாந்து 6-வது இடத்தை பிடித்துள்ளது. 2016-ல் இங்கிலாந்து 3.35 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் 2017-ல் 3.24 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.



    இந்த ஆய்வு அறிக்கையில், இந்தியாவை விட சீனா ராணுவம் அதிக பலம் வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை விட கூடுதலாக நீர் மூழ்கிக் கப்பல்கள், எதிர்ப்பு கருவிகள், போர்க் கப்பல்களை சீனா வைத்துள்ளது. மேலும், சீனா ராணுவத்தில் கூடுதலாக 6 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்தியா 785  நவீன போர் விமானங்களை மட்டுமே வைத்துள்ளது. சீனா 1,200 விமானங்களை வைத்துள்ளது. இந்தியாவை விட சீனாவிடம் கூடுதலாக 55 போர்க்கப்பல்கள் உள்ளன. அதே நேரம், இந்தியா தனது படைகளை நவீன மயமாக்கி வருகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டாப் 15 நாடுகள்:

    1.அமெரிக்கா, 2.சீனா, 3.சவுதி அரேபியா, 4.ரஷியா, 5.இந்தியா, 6.இங்கிலாந்து, 7.பிரான்ஸ், 8.ஜப்பான், 9.ஜெர்மனி, 10.தென் கொரியா, 11.பிரேசில், 12.ஆஸ்திரேலியா, 13.இத்தாலி, 14.இஸ்ரேல், 15.ஈராக். #IndiaArmy #DefenceBudget #Top5IntheWorld #tamilnews
    Next Story
    ×