search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு விடிவு கிடைக்குமா? காவிரி விவகாரத்தில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
    X

    விவசாயிகளுக்கு விடிவு கிடைக்குமா? காவிரி விவகாரத்தில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

    காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் தனித்தனியாக தொடர்ந்த வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க இருக்கிறது. #CauveryWaterIssue
    புதுடெல்லி:

    காவிரி பிரச்னை, தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், முதலில் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர், இறுதி உத்தரவு வெளியிடப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

    இதற்கிடையே, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட வாதம் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது.

    செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இவ்வழக்கு விசாரணையின் போது நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

    ஆனால், மத்திய அரசு அந்த தீர்ப்பை உதாசீனப்படுத்தியதோடு, நடுவர் மன்ற தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட்டது. நீதிமன்றங்கள் தலையிட கூடாது என வாதிட்டது. இவ்வழக்கில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி பல இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தாலும், கர்நாடக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.

    இந்நிலையில், இறுதி வாதங்கள் முடிந்து 150 நாட்களுக்கு பின்னர் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பை தமிழக விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். மேலும், தீர்ப்பு வெளியான பின்னர், இரு மாநிலங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    #Cauvery | #CauveryWaterIssue | #TamilNadu | #Karnataka | #TamilNews
    Next Story
    ×