search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்
    X

    சிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்

    ராஜஸ்தானில் சாலை ஓரத்தில் அமைச்சர் காளிச்சரண் சரப் சிறுநீர் கழிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan #Minister #KalicharanSaraf
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரியாக வசுந்தர ராஜே சிந்தியா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    அங்கு சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் காளிச்சரண் சரப்.

    நேற்று காலை அவர் ஜெய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற இயற்கை உந்துதல் ஏற்பட்டது.

    உடனடியாக மந்திரி காளி சரண் சரப் சாலையோரம் காரை நிறுத்தச் சொன்னார். காரில் இருந்து இறங்கிய அவர் சாலையோரத்திலேயே ஒரு சுவர் ஓரமாக நின்று சிறுநீர் கழித்தார்.

    அவர் சாலையோரத்தில் பட்டப்பகலில் சிறுநீர் கழிப்பதை யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அதை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். இதனால் மந்திரி சிறுநீர் கழிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    ஜெய்ப்பூரில் சாலையோரத்தில் சிறுநீர் கழித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜெய்ப்பூர் நகரம் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மந்திரியே சாலையோரத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மந்திரி காளிச்சரண் சுகாதார இலாகாவுக்கு பொறுப்பு வகிக்கும் நிலையில் இப்படி நடந்து கொண்டது அநாகரீகமானது என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி கருத்து கேட்க நிருபர்கள் மந்திரி காளிச்சரண் வீட்டுக்கு சென்றனர்.

    அப்போது மந்திரி காளிச்சரண் கூறுகையில், “இது ஒரு பெரிய வி‌ஷயமே அல்ல. இதை ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. இதனால் முதல்-மந்திரி வசுந்தரராஜேவை பதவி விலக கோரி அம்மாநில பா.ஜ.க.வில் ஒரு சாரார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. மந்திரியின் செயல்பாடு பா.ஜ.க. மேலிட தலைவர்களிடம் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×