search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்காட்டில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக மாறும் அரிசி ஆலை
    X

    பாலக்காட்டில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக மாறும் அரிசி ஆலை

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லம் கேரள மாநிலம் பாலக்காடு பாமா அரிசி ஆலையில் அமைய உள்ளது.
    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரான எம்.ஜி.ஆர். சிறு வயதில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதன்பிறகே சென்னைக்கு குடிபெயர்ந்து தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

    சென்னையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் இப்போது மாற்று திறனாளிகளுக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இதுபோல பாலக்காட்டில் எம்.ஜி.ஆர். வசித்த வீட்டையும் அவரது நினைவு இல்லமாக மாற்ற சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி முயற்சி மேற்கொண்டார்.

    பாலக்காட்டில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் தற்போது அரிசி ஆலை ஒன்று இயங்கி வந்தது. அதனை எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்டாக் என்ற அமைப்பு இதற்கான முயற்சியை மேற்கொண்டது.

    அதன்படி, பாலக்காடு அரிசி ஆலை எம்.ஜி.ஆரின் நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வந்தது.

    இது பற்றி இன்டாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் நாராயணன் கூறியதாவது:-

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லம் பாலக்காடு பாமா அரிசி ஆலையில் அமைய உள்ளது. இதற்கு மகோரா பாரம்பரிய சென்டர் என்று பெயரிட்டுள்ளோம்.


    பாலக்காட்டில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் அமைய உள்ள அரிசி ஆலை.

    இந்த நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள், அவர் சினிமாவில் நடித்த கதாபாத்திரங்கள் இடம்பெறும். அதோடு பாலக்காட்டின் பெருமைகள், இங்குள்ள கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளையும் நினைவு இல்லத்தில் அமைத்து வருகிறோம். பொம்மலாட்டம் போன்ற கிராமிய கலைகளும் இங்கு இடம் பெற உள்ளது. இதன் மூலம் நினைவு இல்லத்திற்கு வருவோர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறோடு பாலக்காட்டின் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்டாக் அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் கூறும்போது, நினைவு இல்லத்தில் பாலக்காடு பற்றிய புகைப்பட கண்காட்சியும் இடம் பெறும். குறிப்பாக இக்கிராமத்திற்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு பற்றிய தகவல்களும் அங்கு இடம் பெறும் என்றார்.

    பாலக்காடு எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் வருகிற 17-ந் தேதி திறக்கப்படுகிறது. கேரள கலாச்சார துறை மந்திரி ஏ.கே.பாலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைக்கிறார். இதில் இன்டாக் அமைப்பின் இயக்குனர் எல்.என்.குப்தா, சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை இன்டாக் அமைப்பினர் செய்து வருகிறார்கள். #tamilnews


    Next Story
    ×