search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் விவசாயிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி
    X

    ராஜஸ்தானில் விவசாயிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி

    ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.

    ஜெய்பூர்:

    பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆனால் சமீப காலமாக இங்கு பாரதிய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த 2 எம்.பி. தொகுதி, ஒரு சட்டசபை தொகுதி ஆகியவற்றில் நடந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்தது.

    அதேபோல மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் சில இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே சட்டசபை தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க இரு மாநில அரசுகளும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், விவசாயிகளும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    எனவே விவசாயிகளை சமரசப்படுத்தி தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பாரதிய ஜனதா பல்வேறு திட்டங்களை இப்போது அறிவித்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். இதன்படி ரூ.50 ஆயிரம் வரையிலான கூட்டுறவு கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 20 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

    ஏற்கனவே மராட்டியம், உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் கடன்கள் தள்ளுடி செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் இப்போது ராஜஸ்தானும் சேர்ந்துள்ளது.

    ஆனால் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்று வேலை என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

    அவர் இதுபற்றி கூறும்போது, மாநிலத்தில் பெரும்பாலான விவசாயிகள் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அட்டவணை வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் இப்போது கூட்டுறவு கடன்கள் மட்டும் தான், அதுவும் குறிப்பிட்ட வரையரை வரையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே குறுகிய விவசாயிகள் மட்டும் தான் இதில் பயனடைவார்கள். பெரும்பாலான விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

    ராஜஸ்தானை போலவே மத்திய பிரதேசத்தில் விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமை ஆகியவற்றுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேலாக தனியாக குவிண்டாலுக்கு ரூ.200 கூடுதல் போனசாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    சிவராஜ்சிங் சவுகான் 3 மாதங்களுக்கு முன்பு பவன்தர் பூக்தான் யோஜனா என்ற விவசாயிகளுக்கான திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் அடிப்படையில் கூடுதல் போனஸ் வழங்கப்படும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது குறைந்தபட்ச ஆதார விலை நெல்லுக்கு ரூ.2000 ஆகவும், கோதுமைக்கு ரூ.1725 ஆகவும் உள்ளன. இதற்கு மேல் ரூ.200 விவசாயிகளுக்கு கூடுதலாக கிடைக்கும்.

    மேலும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை அரசு குடோன்களில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

    4 மாதங்கள் வரை இருப்பு வைத்து உரிய விலை வரும்வரை காத்திருந்து விற்றுக்கொள்ளலாம். அந்த காலம் வரை உரிய விலை கிடைக்காத பட்சத்தில் அரசே அவற்றை கொள்முதல் செய்து கொள்ளும். விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த திட்டங்களுக்காக அரசு ரூ.620 கோடி கூடுதலாக செலவு செய்ய உள்ளது.

    இந்த திட்டங்களையும் காங்கிரஸ் குறைகூறி இருக்கிறது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் அருண்யாதவ் கூறும்போது, தேர்தலுக்காக முதல்-மந்திரி ஏமாற்று திட்டங்களை அறிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். ஆனால் உரிய விலையை விவசாயிகளுக்கு வழங்கியது இல்லை. இப்போது மட்டும் எப்படி கொடுக்கப்போகிறார்கள். இந்த திட்டங்களுக்கான காலக்கெடுவை இப்போதே அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×