search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீருக்குள் நுழைய காத்திருக்கும் 45 லஷ்கர் தீவிரவாதிகள் - உளவுப் பிரிவு எச்சரிக்கை
    X

    காஷ்மீருக்குள் நுழைய காத்திருக்கும் 45 லஷ்கர் தீவிரவாதிகள் - உளவுப் பிரிவு எச்சரிக்கை

    எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவதற்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 45 பேர் தயார் நிலையில் காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவ முயற்சியிப்பதும், அவர்களை பாதுகாப்பு படையினர் முறியடிப்பதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அப்படி நுழையும் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த நிலையில் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவதற்கு லஷ்கர் - இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 45 பேர் தயார் நிலையில் காத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

    பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தும் பூஜ் மாவட்டம் கிருஷ்ணாசாடி செக்டர் நான்சி தெக்ரி பகுதி வழியாக தீவிரவாதிகள் நுழைய காத்திருப்பதாக காஷ்மீரில் உள்ள உளவுத்துறை மத்திய, மாநில அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரே நேரத்தில் பல்வேறு அதிரடி தாக்குதல்களில் ஈடுபடுவதற்காக லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அவர்கள் எல்லை பகுதியில் காத்திருப்பதாகவும் உளவு துறை அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த எச்சரிக்கை நோட்டீஸ் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு அனுப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பகுதியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதே போல காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் மாநில போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தீவிரவாதிகள் ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் புகுந்து 2 போலீசாரை சுட்டுக் கொன்று பாகிஸ்தான் தீவிரவாதி நவீத்தை மீட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×