search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய அமீரகத்திற்கு வேலைக்குச் செல்வோருக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் கேரளா
    X

    ஐக்கிய அமீரகத்திற்கு வேலைக்குச் செல்வோருக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் கேரளா

    நாட்டிலேயே முதன்முறையாக ஐக்கிய அமீரகத்திற்கு (UAE) வேலைக்காக செல்பவர்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் முறையை கேரளா தொடங்கியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் ஏராளமான மலையாளிகள் வசித்து வருகின்றனர். கேரளா வாசிகள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அவர்களது முதல் தேர்வு ஐக்கிய அமீரகம் தான். இந்நிலையில், பணியாளர் விசாவுக்கு விண்ணப்பிவர்களின் பின்னணியை அறிந்து கொள்ளும் வகையில் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் முறையை கேரளா அமல்படுத்தியுள்ளது.

    கேரள அரசு மற்றும் மாநில காவல் துறை ஒருங்கிணைந்து இந்த பணியை மேற்கொண்டதுடன் இம்முறையின் செயல்திட்டாக்கத்தை திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக துணைத்தூதரிடம் வழங்கியுள்ளனர். இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நபரின் பின்னணி, கிரிமினல் வழக்குகள் உள்ளதா?, அரசியல் செயல்பாடுகளில் பங்கு ஏதும் உள்ளதா?, நிலுவையில் உள்ள வழக்குகள் என அனைத்தும் இந்த சான்றிதழில் விரிவாக தெரிவிக்கப்படும். விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர் இந்த சான்றிதழை இணைக்க வேண்டும் என ஐக்கிய அமீரக தூதரகம் தெரிவித்துள்ளது.

    நாட்டிலேயே முதன்முறையாக கேரளா தொடங்கியுள்ள இந்த திட்டத்தை மேலும் சில மாநிலங்கள் செயல்படுத்த தயாராக இருப்பதாக ஐக்கிய அமீரக துணைத்தூதர் ஜமால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×