search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு தின அணிவகுப்பு: விருதை தட்டிச்சென்ற இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை
    X

    குடியரசு தின அணிவகுப்பு: விருதை தட்டிச்சென்ற இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை

    டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் அணிவகுத்த பல்வேறு பாதுகாப்பு படைகளில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை சிறந்த அணிவகுப்புக்கான விருதை வென்றுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் லடாக் தொடங்கி அருணாச்சல பிரதேசம் வரை உள்ள எல்லைப்பகுதியை இந்தோ திபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த படைப்பிரிவு 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    இமயமலைச்சிகரங்களில் உடலை உருக்கும் குளிரில் இந்த படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும், மலையேற்ற பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 1998-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் போது இந்த படைப்பிரிவு தனது படைக்கலன்களுடன் கலந்து கொண்டது. ஆனால், அதன் பின்னர் நடந்த அணிவகுப்புகளில் ஏனோ சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தங்களது நவீன உபகரணங்களுடன் நடந்து முடிந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது.



    உதவி கம்மாண்டர் அக்‌ஷய் தேஷ்முக் தலைமையில் 148 வீரர்கள் கொண்ட குழு மிடுக்குடன் கம்பீரமாக அணிவகுத்து சென்றது. மேலும், இமயமலைச் சிகரங்களில் ரோந்து பணி மற்றும் மலையேற்ற குழுவினர் செயல்பாடுகளை விளக்கும் காட்சிகள் அடங்கிய ஊர்திகளும் அணிவகுத்தன.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த அணிவகுப்பு விருது இந்தோ திபெத் படைக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இதற்கான விருதை விரைவில் வழங்க உள்ளார். 6 முறையாக இந்த விருது இந்தோ திபெத் படைக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாநில அரசுகள் சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகளில் மராட்டிய மாநில ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×