search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயலில் உயிர் தப்பிய மீனவர் புஷ்பராஜன் தனது பேரக்குழந்தைகளை கொஞ்சிய காட்சி
    X
    ஒக்கி புயலில் உயிர் தப்பிய மீனவர் புஷ்பராஜன் தனது பேரக்குழந்தைகளை கொஞ்சிய காட்சி

    ஒக்கி புயலில் மாயமான கேரள மீனவர் 53 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பினார்

    ஒக்கி புயல் தாக்கி 53 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர் புஷ்பராஜன் ஊர் திரும்பினார். மகளையும் பேரக்குழந்தைகளையும் கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் விழிஞ்ஞம் கருப்பண்ணகரா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜன் (வயது 51), மீனவர்.

    இவர், கடந்த நவம்பர் மாதம் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து அந்தமான் பகுதிக்கு கடலில் மீன்பிடிக்க விசைப்படகில் சென்றார். இவருடன் அந்த படகில் தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இருந்தனர்.

    இவர்களுடன் வந்த இன்னொரு விசைப்படகில் தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சென்றுள்ளனர். அந்தமான் கடல் பகுதியில் இந்த 2 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒக்கி புயல் தாக்கியது. இதில் புஷ்பராஜன் இருந்த படகு கடலில் கவிழ்ந்தது.

    புஷ்பராஜனும், அவருடன் படகில் இருந்த மற்ற 3 மீனவர்களும் கடலில் சிக்கி தத்தளித்தனர். அவர்களில் புஷ்பராஜன் கடும் போராட்டத்திற்கு பிறகு மற்றொரு விசைப்படகில் ஏறி உயிர் தப்பினார்.

    அதன் பிறகு அவர்கள் படகு புயலில் சிக்கி தத்தளித்தது. பிறகு அந்தமானில் கரை ஒதுங்கியது. இதற்கிடையில் அவரால் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாததால் அவரது குடும்பத்தினர் புஷ்பராஜன் கதி பற்றி தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி புஷ்பராஜன் விழிஞ்ஞத்தில் உள்ள தனது மகள் பிரியாவின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் உயிருடன் இருக்கும் தகவலை மகளிடம் தெரிவித்தார்.

    அவர், பேசிக்கொண்டு இருக்கும்போதே போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அவர் பேசிய போன் நம்பரை தொடர்பு கொண்டபோதும், இணைப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தனது தந்தை உயிருடன் இருப்பதை தெரிந்துக் கொண்ட மகிழ்ச்சியில் பிரியா இருந்தார்.

    இதற்கிடையில் ஒக்கி புயல் தாக்கி 53 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர் புஷ்பராஜன் ஊர் திரும்பினார். மகளையும் பேரக்குழந்தைகளையும் கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார். ஒக்கி புயலில் சிக்கி தான் உயிர் பிழைத்த அந்த சம்பவங்களை அவர்களுக்கு தெரிவித்தார்.

    கடவுள் அருளால் தான் உயிர் தப்பி உள்ளதாகவும் தன்னுடன் படகில் வந்த குமரி மீனவர்களும் அதுபோல உயிர் தப்பி இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். #tamilnews

    Next Story
    ×