search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் தடை மசோதா விவகாரம்: கூச்சல், குழப்பம் நிலவியதால் மாநிலங்களவை நாளைவரை ஒத்திவைப்பு
    X

    முத்தலாக் தடை மசோதா விவகாரம்: கூச்சல், குழப்பம் நிலவியதால் மாநிலங்களவை நாளைவரை ஒத்திவைப்பு

    முத்தலாக் தடை மசோதா விவகாரம் தொடர்பாக இன்றும் கூச்சல், குழப்பம் நிலவியதால் மாநிலங்களவை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #tripletalaqbill #rajyasabha
    புதுடெல்லி:

    முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, பாராளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

    மசோதா மீது காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை.

    மசோதாவை அப்படியே நிறைவேற்ற முயற்சிக்காமல், மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மட்டுமின்றி, பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வற்புறுத்தி வருகிறது.

    ஆனால், மக்களவையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டதால், எந்த குழுவுக்கும் அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது.

    இந்நிலையில், இன்று பிற்பகல் பாராளுமன்ற மாநிலங்களவையில் சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் செய்தார்.  இந்த மசோதாவில் தாங்கள் வலியுறுத்திய திருத்தங்கள் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இந்த மசோதா விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதேபோல், மசோதா மீதான விவாதத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரக் ஒ பிரியன் பேசுகையில், எதிர் கட்சிகளாகிய நாங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் நீங்கள் அதற்கு தடையாக இருந்து வருகிறீர்கள் என ஆவேசமாக பேசினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, கண்டிப்பாக கிடையாது. இது குறித்து இப்போது கூட விவாதம் நடத்த நாங்கள் தயார் என்றார்.  

    மேலும், முத்தலாக் ஒழிப்பு மசோதாவை மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

    இதனால், இருதரப்பினருக்கும் இடையே காரசாரமான விவாதம் மூண்டதால் மாநிலங்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் உத்தரவிட்டார். #tripletalaqbill #rajyasabha #tamilnews
    Next Story
    ×