search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போபால் கூட்டுக் கற்பழிப்பு வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை
    X

    போபால் கூட்டுக் கற்பழிப்பு வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை

    போபால் நகரில் இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
    போபால்:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி மாலை 7 மணியளவில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஹபிப்கஞ்ச் ரெயில் நிலையம் நோக்கி, தண்டவாளத்தில் தனியாக நடந்து சென்றபோது இரண்டு நபர்கள், அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று ஒரு பாலத்தின் அடியில் கட்டிப்போட்டு மாறி மாறி கற்பழித்தனர். 

    தன்னை விட்டு விடும்படி மாணவி கெஞ்சியும் விடவில்லை. தனது ஆடைகள் கிழிந்த நிலையில் வெளியே செல்ல முடியாமல் பரிதவித்த மாணவி, தன்னை சீரழித்த நபர்களிடமே துணிகள் கொடுக்கும்படி கெஞ்சியுள்ளார். இதனால் அவர்களின் ஒருவன் வீட்டுக்கு சென்று தன் மனைவியின் உடையை எடுத்து வந்து கொடுத்துள்ளான். கூடவே 2 நண்பர்களையும் அழைத்து வந்தான்.

    இந்த முறை 4 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். இரவு 10 மணி வரை இந்த கொடுமை நடந்துள்ளது. பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த வாட்ச், செல்போன் மற்றும் கம்மலை பறித்துவிட்டு அனுப்பி வைத்தனர். ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் பிரதான சாலைக்கு மிக அருகாமையில் இந்த சம்பவம் நடந்தும், மாணவியின் கூக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. 

    காமுகர்களின் பிடியில் இருந்து விடுபட்ட மாணவி, தட்டுத்தடுமாறி அருகில் உள்ள ரெயில்வே சோதனைச் சாவடிக்கு வந்து தன் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தார். தன் மகளின் நிலையைப் பார்த்து கதறித் துடித்த தந்தை, வீட்டுக்கு உடனே அழைத்துச் சென்றுவிட்டார்.

    மறுநாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரை வாங்காமல் 3 காவல் நிலையங்களில் இழுத்தடித்துள்ளனர். மாணவி கதை விடுவதாக ஒரு அதிகாரி கூறி அலட்சியப்படுத்தினார். இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் தாய், தந்தை இருவரும் காவல் துறையில் வேலைபார்க்கின்றனர்.

    பின்னர் ஒரு வணிக வளாகத்தில், குற்றவாளிகளில் இரண்டு நபர்கள் இருப்பதை அந்த மாணவி பார்த்துவிட்டார். இதையடுத்து, மாணவியும், அவரது பெற்றோரும் சேர்ந்து அந்த நபர்களை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இவ்விவகாரத்தில் அலட்சியமாக இருந்த எம்.பி.நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

    இந்த சம்பவத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய போபால் நகர போலீஸ் சூப்பிரண்ட்டை பணியிடமாற்றம் செய்தும், 4 உயரதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மத்தியப்பிரதேசம் மாநில போலீஸ் டி.ஜி.பி. சுக்லா பின்னர் உத்தரவிட்டார்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி குற்றப்பரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் விசாரணை முடிந்து போபால் மாவட்ட கூடுதல் நீதிபதி சவிதா துபே இன்று தீர்ப்பளித்தார்.

    குற்றவாளிகள் கோலு (எ) பிஹாரி சதர்(25), அமர் (எ) குன்ட்டு(24), ராஜு  (எ) ராஜேஷ் சேட்ராம்(26), ராஜு (எ) ரமேஷ் மெஹ்ரா(45) ஆகியோர் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கற்பழிப்பு வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×