search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சலுக்கு ரூ.16 லட்சம் செலவு செய்தும் உயிர் இழந்த சிறுமி
    X

    டெங்கு காய்ச்சலுக்கு ரூ.16 லட்சம் செலவு செய்தும் உயிர் இழந்த சிறுமி

    டெங்கு காய்ச்சலுக்கு ரூ.16 லட்சம் செலவு செய்தும் உயிரை காப்பாற்ற முடியாமல் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது. சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

    மேற்கு டெல்லி துவாரகா நகரைச் சேர்ந்தவர் ஜெயந்த் சிங். ஐ.டி. கம்பெனி என்ஜினீயர். இவரது மகள் அதியா (வயது7). 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். துவாரகா நகரில் உள்ள ராக்லேண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை.

    மாணவி அதியாவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை ஆய்வு செய்து கண்டறிந்தனர்.

    இதையொட்டி மாணவி அதியாவுக்கு மேல் சிகிச்சை அளிக்க புதுடெல்லியில் உள்ள போர்டீஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (கோரகான்) மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 2 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மாணவி அதியா நேற்று உயிர் இழந்தார். மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை ரூ.16 லட்சம் செலவு செய்துள்ளனர். அப்படி இருந்தும் மாணவி உயிர் பிழைக்க முடியவில்லை.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆஸ்பத்திரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு புகார் தெரிவித்தனர். மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா இதுகுறித்து அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    சுகாதார துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ‘போர்டீஸ்’ மருத்துவமனை நிர்வாகம் மாணவிக்கு ரூ.16 லட்சம் சிகிச்சை கட்டண செலவு குறித்து மறுப்பு தெரிவித்து உள்ளது. மாணவி அபாய கட்டத்தில் தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். சிகிச்சை முறைகள் குறித்த 20 பக்க அறிக்கைகள் உள்ளன. அதில் தெளிவாக சிகிச்சை முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

    தவறான சிகிச்சை, கூடுதல் கட்டணம் என்பதை ஏற்க முடியாது என ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×