search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி சமரச பேச்சில் அரசு தலையீடு இல்லை: மத்திய மந்திரி நக்வி அறிவிப்பு
    X

    அயோத்தி சமரச பேச்சில் அரசு தலையீடு இல்லை: மத்திய மந்திரி நக்வி அறிவிப்பு

    அயோத்தி விவகாரத்தில் அரசின் தலையீடு ஏதும் இல்லை என்றும் பேச்சு வார்த்தையில் அரசின் பங்களிப்பும் கிடையாது என்றும் மத்திய மந்திரி நக்வி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய வழக்கை விசாரித்து அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வு, 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

    அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வு காண ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முன் வந்துள்ளார். இவர் நாளை (வியாழக்கிழமை) அயோத்தி சென்று, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.

    இதில் சமரச தீர்வு காணும் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டும் எதிராக இல்லை. ஆனால் சமரச பேச்சில் மத்திய அரசின் தலையீடு உள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.



    இதுபற்றி மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், “இந்த விவகாரத்தில் அரசின் தலையீடு இல்லை. பேச்சு வார்த்தையில் அரசின் பங்களிப்பும் கிடையாது. இந்தப் பிரச்சினைக்கு சம்மந்தப்பட்டவர்களிடையே சமரச தீர்வு காணப்பட்டால் அது வரவேற்கத்தகுந்தது” என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறும்போது, “ பேச்சு வார்த்தை வெற்றி பெறாவிட்டால், கோர்ட்டு இதில் தீர்மானிக்கும்” என்றும் தெரிவித்தார்.
    Next Story
    ×