search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா பயணிகளுக்கு உதவ வெளிநாட்டு மொழிகளை கற்கும் ஆக்ரா போலீசார்
    X

    சுற்றுலா பயணிகளுக்கு உதவ வெளிநாட்டு மொழிகளை கற்கும் ஆக்ரா போலீசார்

    வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஆக்ரா போலீசாருக்கு எட்டு வெளிநாட்டு மொழிகள் கற்பிக்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள பழமையான நகரமான பதேபூர் சிக்ரி என்ற பகுதியில் கடந்த 22-ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா தம்பதியினர் மீது உள்ளூர் கும்பல் ஒன்று கொடூர தாக்குதல் நடத்தியது. 

    இந்த தாக்குதல் குறித்து வெளிநாட்டு தம்பதியினர் புகார் அளிக்காத நிலையிலும், உள்ளூர் போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முகுல் என்ற நபர்தான் இந்த தாக்குதலை தூண்டியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள முகுலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட முகுலின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் தனது கவலைகளை தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் தங்களது நாட்டவர்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. 

    இந்த தாக்குதலையடுத்து மொழி தெரியாததும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதால் ஆக்ரா போலீசாருக்கு  வெளிநாட்டு மொழிகளை கற்பிக்குமாறு ஆக்ரா மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் அமித் பதக், மாநில அரசுக்கு சிபாரிசு செய்திருந்தார்.

    அதில், ஆக்ராவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்கு உதவும் வகையில் அங்கு பணிபுரியும் போலீசாருக்கு 8 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலத்தோடு ஜெர்மன், மாண்டரின், ஸ்பானிஷ், கொரியன், போர்த்துகீசியம், ஜப்பானியம், பிரஞ்சு மற்றும் ரஷிய ஆகிய எட்டு மொழிகளையும் போலீசார் கற்க வேண்டிவரும். ஆக்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் விரும்பி இணையும் போலீசார் குறைந்தது மூன்று ஆண்டு காலம் சுற்றுலா போலீஸ் பிரிவில் பணியமர்த்தப்படுவர். ஆக்ராவின் தாஜ் மகால் மற்றும் ஃபதேபூர் சிக்ரி ஆகிய இடங்களில் சுற்றுலா போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.  இந்த காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீசார் குறைந்தது ஒரு வெளிநாட்டு மொழியை கற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×