search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரி லங்கேஷ் படுகொலை: கொலையாளிகளின் வரைபடங்களை வெளியிட்டது சிறப்பு விசாரணைக் குழு
    X

    கவுரி லங்கேஷ் படுகொலை: கொலையாளிகளின் வரைபடங்களை வெளியிட்டது சிறப்பு விசாரணைக் குழு

    பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் சந்தேகப்படும் நபர்களின் வரைபடங்களை சிறப்பு விசாரணைக்குழு இன்று வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கடந்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க உளவுப்பிரிவு போலீஸ் ஐ.ஜி.யான பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கவுரி லங்கேசை சுட்டுக் கொன்ற ஒரு மர்மநபரின் உருவம் மட்டும், அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த காட்சிகள் தெளிவாக இல்லாத காரணத்தால் கொலையாளிகளை அடையாளம் காண்பதில் பின்னடைவு ஏற்பட்டது. பசவனகுடியில் உள்ள கவுரி லங்கேஷின் அலுவலகத்தில் இருந்து ராஜராஜேஸ்வரி நகர் பகுதி வரை உள்ள 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், இந்த ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள் மற்றும் கவுரி லங்கேஷ் வீட்டில் அருகில் உள்ளவர்களிடம் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையில் கொலையாளிகள் என சந்தேகப்படும் நபர்களின் வரைபடங்களை சிறப்பு விசாரணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.



    வரைபடங்களை வெளியிட்டு சிறப்பு விசாரணைக்குழு தலைவர் பி.கே.சிங் கூறியதாவது:-

    எங்கள் தொழில்நுட்ப குழு மற்றும் உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொலையாளிகள் கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த நகரில் வந்து தங்கியிருந்து கண்காணித்துள்ளனர். இந்த படங்களில் இருப்பது போன்ற முகதோற்றம் உள்ளவர்கள் யாராவது தங்கியிருந்தார்கள் என்றால், பொதுமக்கள் தகவல் தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும்.

    இந்த கொலை தொடர்பாக 200 முதல் 250 நபர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த தகவலை சரிபார்த்து வருகிறோம். கொலையாளிகள் இருவருக்கும் 25 முதல் 35 வயது இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×