search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பலியானதற்கு முதல்-மந்திரியே பொறுப்பு: ஆர்.எஸ்.எஸ்.
    X

    உ.பி. ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பலியானதற்கு முதல்-மந்திரியே பொறுப்பு: ஆர்.எஸ்.எஸ்.

    உ.பி. ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பலியானதற்கு முதல்-மந்திரியே பொறுப்பு என்று ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்களில் ஒருவருமான பிரபு நாராயண் கூறி உள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் தான் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியானார். ஆனால், அவரது நியமனத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருந்ததாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமே யோகி ஆதித்யநாத் மீது குற்றம் சாட்டும் நிலை உருவாகி உள்ளது.

    கோராக்பூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இல்லாததால் 63 குழந்தைகள் உயிர் இழந்தனர். இந்த பிரச்சினை அகில இந்திய அளவில் விசுவரூபம் எடுத்துள்ளது. இது, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நிர்வாக திறமையை குறை சொல்லும் அளவுக்கு சென்றுள்ளது.

    இப்போது அவரை முதல்-மந்திரி ஆக்கிய ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அவர் மீது குற்றம் சாட்டி இருக்கிறது.

    இது தொடர்பாக அவாத் பகுதி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியும், ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்களில் ஒருவருமான பிரபு நாராயண் தனது பேஸ்-புக் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் சாவுக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், இதற்கு முழு பொறுப்பையும் அரசு தான் ஏற்க வேண்டும். முதல்-மந்திரிக்கு இதில் தார்மீக பொறுப்பு உள்ளது. பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. இங்கு எதிர்க்கட்சிகளோ மற்றவர்களோ போராட்டம் நடத்தலாம். அதே நேரத்தில் ஆளும் கட்சி இந்த வி‌ஷயத்தில் அலட்சியாக இருக்க கூடாது.

    அவர்கள் இதற்காக வருந்த வேண்டும். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மிக முக்கியமான பிரச்சினை. இதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    கோராக்பூர் ஆஸ்பத்திரி உயிர் பலி குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும், சுகாதார மந்திரி சித்தார்த்தநாத் சிங்கும் விளக்கம் அளித்திருந்தனர். அதில், உயிர் பலிக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு அல்ல, சுகாதார சீர்கேடுதான் காரணம் என்று கூறி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆஸ்.எஸ்.எஸ். தலைவர் பிரபு நாராயண் இந்த செய்தியை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×