search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையாவை ஆஜர்படுத்தாமல் தீர்ப்பு கூற முடியாது: உச்ச நீதிமன்றம்
    X

    விஜய் மல்லையாவை ஆஜர்படுத்தாமல் தீர்ப்பு கூற முடியாது: உச்ச நீதிமன்றம்

    கோர்ட் அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவை ஆஜர்படுத்தாமல் தங்களால் தீர்ப்பு கூற முடியாது என்றும், அவரை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தொழிலதிபர் விஜய் மல்லையா, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பெற்றிருந்தார். ஆனால், அவர் கடன் தொகையை கட்டவில்லை. இதையடுத்து, வங்கிகள் சார்பில் மல்லையா மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.



    வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை உத்தரவிட்டும் மல்லையா ஆஜராகவில்லை. இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று லண்டனில் வசித்து வருகிறார். இதனால், அவர் மீது ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தண்டனை தொடர்பான வாதம் ஜூலை 10-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை. எனவே, தண்டனை தொடர்பான வாதத்தை 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    அதன்படி, நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லண்டனில் உள்ள மல்லையாவை இன்றும் விசாரணைக்கு ஆஜர்படுத்தவில்லை. எனவே, விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜர்படுத்தவேணடும் என்று கூறிய நீதிபதிகள், அவரை ஆஜர்படுத்தினால்தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். மேலும், மல்லையாவை ஆஜர்படுத்தாமல் தங்களால் தீர்ப்பு கூற முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

    மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார். அவர் வாதாடும்போது, ‘மல்லையாவை நாடு கடத்தும் நடைமுறைகள் தொடர்பான வழக்கு பிரிட்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு முடிந்தால்தான் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர வாய்ப்பு உள்ளது” என்றார்.
    Next Story
    ×