search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா குடும்பத்துக்கு 44 நாளில் கட்டி முடிக்கப்பட்ட வீடு தாயாரிடம் நாளை ஒப்படைப்பு
    X

    சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா குடும்பத்துக்கு 44 நாளில் கட்டி முடிக்கப்பட்ட வீடு தாயாரிடம் நாளை ஒப்படைப்பு

    கேரளாவில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி குடும்பத்துக்கு 44 நாளில் கட்டி முடிக்கப்பட்ட வீடு நாளை தாயாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே பெரும்பாவூரில் தலித் காலனியில் வசித்த சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கடந்த ஏப்ரல் மாதம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    தனது குடிசை வீட்டில் தனிமையில் இருந்த ஷிஜாவை கற்பழித்து கொன்றதாக அசாம் மாநிலத்தை சேர்ந்த அமிருல் இஸ்லாம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஷிஜா இறந்த அதிர்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது தாயார் ராஜேஸ்வரி தற்போது வரை பெரும்பாவூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொலையுண்ட மாணவி ஷிஜாவின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு கேரள அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஷிஜாவின் குடிசை அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டும் பணி ரூ.11 லட்சத்தில் தொடங்கியது. கொச்சி கலெக்டர் ராஜமாணிக்கம் நேரில் சென்று பார்வையிட்டு இந்த பணிகளை துரிதப்படுத்தினார். இதனால் 44 நாட்களில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இரண்டு படுக்கை அறை, ஒரு ஹால், சமையல் அறை மற்றும் கழிவறை வசதியுடன் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. நாளை இந்த வீடு ஷிஜாவின் தாயார் ராஜேஸ்வரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. கலெக்டர் ராஜமாணிக்கம் சாவியை அவரிடம் வழங்குகிறார். இதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து ராஜேஸ்வரியை அங்கு அழைத்து வர ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் சாலக்குடி கம்யூனிஸ்டு எம்.பி.யும் நடிகருமான இன்னசென்டும் கலந்துகொள்கிறார்.

    Next Story
    ×