search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷிஜா கொலையில் கைதான அசாம் வாலிபருக்கு பெண் டாக்டர் கொலையிலும் தொடர்பு: குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
    X

    ஷிஜா கொலையில் கைதான அசாம் வாலிபருக்கு பெண் டாக்டர் கொலையிலும் தொடர்பு: குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

    மாணவி ஷிஜா கொலையில் கைதான அசாம் வாலிபருக்கு பெண் டாக்டர் கொலையிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அசாம் வாலிபரிடம் விசாரணை நடத்த கொச்சி குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணா குளம் அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்த தலித் இனத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக ஏ.டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி அசாம் மாநில வாலிபர் அமீருல் இஸ்லாம் என்பவரை கைது செய்தனர். தன்னிடம் அமீருல் இஸ்லாம் செக்ஸ் சில்மி‌ஷம் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவி ஷிஜா அவரை செருப்பால் அடித்ததால் அது கொலையில் முடிந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    தற்போது பெரும்பாவூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அமிருல் இஸ்லாமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு எர்ணாகுளம் கோர்ட்டில் பெரும்பாவூர் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அமிருல் இஸ்லாமை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை சூடுபிடித்து உள்ளது.

    கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொச்சி அருகே உள்ள மாதிரபள்ளி என்ற இடத்தில் தனது வீட்டில் வைத்து ஷோஜி (வயது34) என்ற பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டார்.

    இவர் தனது வீடு அருகே ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வந்தார். மேலும் வீட்டிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கொலை நடந்த அன்று வீட்டில் டாக்டர் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த கொலை வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்ட அசாம் மாநில வாலிபர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவர் சம்பவத்திற்கு பிறகு தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் பல இடங்களில் தேடியும் இதுவரை சிக்கவில்லை.

    இந்த நிலையில் மாணவி ஷிஜா கொலை வழக்கில் கைதாகி உள்ள அமிருல் இஸ்லாம் அசாம் வாலிபர் என்பதால் அவர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அமிருல் இஸ்லாமிடம் விசாரணை நடத்த கொச்சி குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    Next Story
    ×