search icon
என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    நெல்லை முன்னாள் மேயரை கொன்றவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும், எனவே சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கே பார்த்தாலும் ஊழல், ஊழல் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் ஊழல் செய்யவில்லையென்றால், வேலூரில் எப்படி கட்டுக்கட்டாக ரூ.10 கோடி பணம் வரும்? எப்படி உங்களுக்கு வேண்டியவர் வீட்டிலிருந்து பணம் எடுக்க முடியும்?

    எல்லா கட்சியிலும் அந்தந்த கட்சியின் தலைவர்கள், மகன்கள் இருப்பது வாடிக்கை. அவர்கள் கட்சியில் பொறுப்பிற்கு வருவது தவறல்ல, கட்சி தலைவராக வருவதைத் தான் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். கருணாநிதி இருந்தார், அவருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், அதற்குப் பிறகு உதயநிதி வந்திருக்கின்றார். வாரிசு அரசியல் தான் இருக்கக்கூடாது என்கின்றோமே தவிர அவருடைய மகன் தேர்தலில் நிற்பதையோ மற்றவர்கள் தேர்தலில் நிற்பதையோ நாங்கள் பொருட்படுத்தவில்லை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கைப் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசி வருகிறார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார்.

    ஆனால் உமா மகேஸ்வரி உள்பட 3 பேரை கொலை செய்தவர்கள் தி.மு.க பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் என்பதை இரண்டே நாட்களில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். எனவே சட்டம்-ஒழுங்கைப் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.

    முக ஸ்டாலின்


    தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பிரியாணி கடைக்குச் சென்று உணவு அருந்திவிட்டு பணம் கேட்டால், அவர்களை அடித்து உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பிரியாணி கடைக்குச் சென்று மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். இவர் கட்சித்தலைவரா அல்லது கட்டப்பஞ்சாயத்து தலைவரா என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த ஆட்சியை கலைக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல முறை முயன்றும், அவரால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது. எங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினாலும், மு.க.ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது.

    எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரது ஆசை வார்த்தைகளை நம்பி, எங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக, இன்றைக்கு ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள். உண்மை தான் வெல்லும். நிஜம் தான் ஜெயிக்கும், நீதி தான் வெல்லும்.

    எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் எண்ணற்றப் போராட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் நடத்தப்பட்டன. போராட்டம் செய்த அமைப்புகளை அழைத்து சமாதானம் பேசி, போராட்டத்தை கைவிடச் செய்து வெற்றி கண்ட அரசு அம்மாவின் அரசு.

    இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க தான். இஸ்லாமிய சமுதாய மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி நிம்மதியாக வாழ உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

    இந்த அணைக்கட்டுத் தொகுதிக்குட்பட்ட மேல் அரசம்பட்டு கிராமத்தில் ஒரு அணை கட்ட வேண்டும் எனவும், வேலூர் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக இருப்பதால் அதனை பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வரப்பேற்றுள்ளது. இந்த கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    வேலூர்:

    வேலூர் உமராபாத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை ஒருமுறை கூட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.

    தேர்தலுக்காக மட்டும் வந்து செல்பவர்கள் அல்ல நாங்கள், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம். 

    ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக தான்.

    திமுக கூட்டணியில் 38 பேர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தை கலக்குகிறார்கள்.

    நடக்க வேண்டிய தேர்தலை நிறுத்தி இருக்கலாம், 5-ம் தேதி நடக்கும் தேர்தலில் வெல்வது நாம் தான். ரெய்டு என்ற பெயரில் நாடகத்தை நடத்தி ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்தலை ரத்து செய்தனர்.
    ஓ பன்னீர்செல்வம்
    வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. கருணாநிதியை அவமானப்படுத்துவதாக நினைத்து அப்துல்கலாமை கொச்சைப்படுத்தி உள்ளார் ஓபிஎஸ்.

    ஓபிஎஸ் கூறியது உண்மை என்றால் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அரசியலை விட்டு விலக வேண்டும். உண்மையை ஓபிஎஸ் நிரூபிக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது கட்டமாக மீண்டும் வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பஸ்நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.

    2-வது கட்டமாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆலங்காயம், ஆம்பூரில் பிரசாரம் செய்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது கட்டமாக மீண்டும் வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பஸ்நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் மண்டி தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி ஓட்டு கேட்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி செல்லும் வழி நெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    வேலூர்:

    பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி உள்ளது.

    தேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. கூட்டணி, 38 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணிக்கு இது முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.

    வேலூர் தொகுதியின் வெற்றி, தோல்வி சட்டமன்ற தேர்தலில் எதிரோலிக்கும் என இருகட்சியினரும் நம்புகின்றனர். இதையடுத்து வேலூர் தொகுதியை கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்தார். இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றுடன் பிரசாரத்தை முடித்து விட்டார். அமைச்சர்கள் தொகுதி முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்தார். 2-ம் கட்ட பிரசாரத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் வந்து தங்கினார்.

    நேற்று ஆம்பூரை அடுத்த மோட்டு கொல்லையில் தனியார் தோல் தொழிற்சாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோல்தொழிலாளர்கள் மத்தியில் பேசினார்.

    பின்னர் ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்துடன் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    தேர்தல் பறக்கும் படையினர், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், தாசில்தார் சுஜாதா ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டபோது கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற வில்லை என்று தெரிய வந்தது.

    மண்டபத்தின் நிர்வாகி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் தாசில்தார் சுஜாதா முன்னிலையில் வருவாய்த் துறையினர் திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து தாசில்தார் சுஜாதா ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த் ஆகியோர் மீது 171 எப், 171 சி, 188 ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருமண மண்டப உரிமையாளர் ஜக்ரியா, தோல்தொழிற்சாலை உரிமையாளர் பரீதாபாபு ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கடந்த 5-ந்தேதி முதல் களை கட்டி வந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வேலூர் தொகுதியில் தங்கியுள்ள வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்து உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்து உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    பண பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந் தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக களம் இறங்கியவர்களையே பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. களம் இறக்கியுள்ளது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவர் ‘இரட்டை இலை’ சின்னத்தில் களம் காண்கிறார். அதேபோல, தி.மு.க. சார்பில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் வேலூரில் முகாமிட்டு வெற்றிக்கான வியூகத்தை வகுத்து வருகின்றனர்.

    அதேபோல தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்ய அக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் வேலூரில் குவிந்துள்ளனர். வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளடங்கிய 6 சட்டசபை தொகுதிகளிலும் குழு அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேலூர் பாராளுமன்ற தொகுதி களைகட்டி இருக்கிறது.

    தேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி வேலூரில் இறுதிகட்ட பிரசாரம் சூடுபிடித்து இருக்கிறது.

    அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அணைக்கட்டு சட்டசபை தொகுதியிலும், மாலை 6 மணிக்கு வேலூர் சட்டசபை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அதேபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மாலை 4 மணிக்கு குடியாத்தம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்தி சவுக், குடியாத்தம் (பஸ் நிலையம்), பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

    நாளை (சனிக்கிழமை) வேலூர் மண்டி தெருவில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, முத்தரசன் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.
    முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
    வேலூர்:

    வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று இஸ்லாமிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் முன்னிலையில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்னவென்று தயவுசெய்து நினைத்து பாருங்கள். முத்தலாக் என்ற ஒரு கொடுமையான மசோதாவைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்திலும் அதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றி முடித்த நேற்றைய தினம் ஜனாதிபதியும் கையெழுத்துப் போட்டிருக்கக்கூடிய ஒரு அக்கிரமம் நடந்து முடிந்திருக்கின்றது. அதை நாம் கடுமையாக தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளும் அதனை எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

    நாம் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார்கள். 5 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அப்பொழுது இந்த முத்தலாக் மசோதா வரக்கூடாது. வந்தால் எங்கள் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார்.

    ஆனால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனியின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் இந்த மசோதாவை ஆதரித்து பேசி இருக்கின்றார்.

    இவர் பேசியதும் அடுத்த நாள் அ.தி.மு.க. அமைச்சர்களுள் முக்கியமான ஒருவர் என்ன சொல்கின்றார் என்றால் ‘நாக்கு தவறி’ பேசிவிட்டார் என்று சொல்கின்றார். ஏதாவது தேதியை மாற்றி பேசினால், இல்லை பெயரை ஏதாவது மாற்றி பேசினால் அவ்வாறு சொல்லலாம். ஆனால், இந்த சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து ஒரு மிகப்பெரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். அது நாக்கு தவறுதலா?. அதைத்தான் தயவுசெய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே இரட்டைவேடம் போடுகின்றது.

    மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் இந்த சட்டம் வரக்கூடாது என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கின்றார். உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தது. தி.மு.க. மட்டுமல்ல ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் எதிர்க்கப் போகின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். பேசிவிட்டு கடைசியில் என்ன செய்கின்றார்கள் என்றால் ஓட்டுப்போடும் பொழுது வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள். ராஜ்ய சபாவில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தார்கள் என்றால் இந்த சட்டம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் ஆதரித்தும் ஓட்டுப் போடாமல், எதிர்த்தும் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.

    இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்


    வெளிநடப்பு செய்கின்ற பொழுது அந்த ஓட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவையில் இருக்கக்கூடியவர்களை வைத்துதான் ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்து யார் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள் எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள் என்று கணக்கெடுத்து சொல்வார்கள். ஏன் வெளிநடப்பு செய்தார்கள் என்றால், மோடி கோபித்துக்கொள்வார். மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும். இங்கு இந்த ஆட்சி இருக்காது.

    எனவே வேலூரில் நடக்கக்கூடிய இந்தத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்களின் ஓட்டுக்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற நாடகம் போட்டு எதிர்த்துப் பேசி விட்டார்கள். ஆனால் மோடியை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காக ஓட்டு போடாமல் வெளியில் வந்து விட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் எப்படி இரட்டையர்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதோ? அதேபோல் இதிலும் இரட்டை வேடம் போடக் கூடிய நிலை இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இதனை உங்களுக்கு நினைவுபடுத்தி உங்களுக்காக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல, சிறுபான்மையின மக்களுக்கும் தொடர்ந்து பாடுபடக்கூடிய பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய தி.மு.க.வுக்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆம்பூரில் தோல் தொழிலாளர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    ஆம்பூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். 29-ந்தேதி இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    மு.க.ஸ்டாலின் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 2-வது கட்ட பிரசாரத்திற்காக நேற்று இரவு ஆம்பூர் வந்தார்.

    ஆம்பூர் மோட்டுக்கொல்லையில் உள்ள ஓய்வு விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். மோட்டுக் கொல்லையில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    அவர்கள் மோட்டுக்கொல்லைக்கு வரவழைக்கப்பட்டனர். அங்குள்ள விடுதி வளாகத்தில் தொழிலாளர்கள் சபா நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்டாலின் கலந்துகொண்டு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தரக்கோரி வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து விண்ணமங்கலம், கிரிசமுத்திரம், செங்கிலி குப்பம் கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

    இன்று மாலை வீராங்குப்பம், வடச்சேரி, மதனாஞ்சேரி, செங்கிலி குப்பம் ஆம்பூர் டவுனில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை குடியாத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்திசவுக், குடியாத்தம், புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கும் தோல்வி பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும் என்று வேலூரில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா பேசினார்.

    வேலூர்:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆளும் அ.தி.மு.க. அரசு ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்ற நெருக்கடியில் இருக்கிறது. மேலும் மோடியால் ஆட்டுவிக்கும் எடுபிடி அரசாக, கையாலாகாத அரசாக உள்ளது. இந்த அரசால் தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற முடியவில்லை. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.

    பா.ஜ.க. அரசு ஆர்.எஸ்.எஸ்.சின் கருவியாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்றாக கலந்து பழகுகிறார்கள். இந்த நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. பா.ஜ.க. மதவெறியை தூண்டிவிட்டு பிரிக்க முயற்சிக்கிறது.

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. இணைந்து இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் அரசியல் சட்டம் மதிக்கப்படவில்லை. தலித் மக்கள் மீது அடக்குமுறை, கும்பல் கொலை நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகம் பறிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறது. அதற்கு அ.தி.மு.க. துணை போகிறது. எனவே அ.தி.மு.க.வுக்கு தோல்வியை கொடுத்து பாடம் புகட்ட வேண்டும்.

    பிரதமர் மோடி

    வேலூரில் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கும் தோல்வி மோடிக்கு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும். ஆந்திரா, கேரளா போன்ற பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க. இறங்கி உள்ளது.

    வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை வைத்து பல கட்சிகளை நிர்ப்பந்தித்து, அந்த கட்சி உறுப்பினர்களை கட்சிமாற செய்கிறது. இதற்கு பா.ஜ.க.வுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை 2-வது கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந்தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.

    இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறார்.

    நாளை மாலை 5 மணிக்கு (2-ந் தேதி) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் வாக்கு கேட்டு பேசுகிறார்.

    2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி வாக்கு கேட்கிறார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூரில் முகாமிட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்காக 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதால் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதற்கு பிரசார வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
    வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இங்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி பிரசாரம் செய்தார். 29-ந்தேதி வரை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் அதன்பிறகு சென்னை திரும்பினார்.

    2-வது கட்ட பிரசாரத்துக்காக இன்று மாலை அங்கு செல்கிறார். ஆம்பூரில் உள்ள மிட்டாளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்கி வீராங்குப்பம், வடசேரி, மதனாஞ்சேரி, செங்கிலிகுப்பம், ஆம்பூர் நகரம் வரை பிரசாரம் செய்கிறார்.

    நாளை (2-ந்தேதி) மாலை குடியாத்தம் பகுதியில் உள்ள உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்திசவுக், குடியாத்தம் புதிய பஸ் நிலையம், பள்ளி கொண்டா ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    3-ந்தேதி மாலை வேலூர் மண்டித் தெருவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்கிறார். துரைமுருகன், ஜெகத்ரட்சகன், காந்தி எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வி, முகமது சகி உள்பட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
    அதிமுக எப்படி இரட்டை தலைமையில் இயங்குகிறதோ, அதைப் போலவே முத்தலாக் மசோதாவிலும் இரட்டை வேடம் போட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முத்தலாக் தடை மசோதா என்று அழைக்கப்படும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முஸ்லிம் மதத்தில் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அது கிரிமினல் குற்றமாகி, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

    விவாகரத்து செய்யப்படும் இந்து அல்லது கிறிஸ்துவப் பெண்களின் கணவர்களுக்கு சிறை தண்டனை கொடுக்காதபோது, முத்தலாக் சொல்லும் ஆண்களுக்கு மட்டும் சிறை தண்டனை கொடுப்பது நியாயம் தானா என்கிற கேள்வி எழுந்துள்ளது. விவாகரத்து செய்யப்பட்ட பிறகு கணவன் சிறையில் அடைக்கப்பட்டால் மனைவியின் வாழ்வாதாரத்தை யார் பாதுகாப்பது? இந்த கேள்விக்கு இதுவரை பா.ஜ.க. பதில் கூறவில்லை.

    பண்டித நேரு வகுத்த மதச்சார்பற்ற கொள்கையின்படி, ‘நம்முடைய அரசாங்கம் ஒரு மதச்சார் பற்ற அரசாங்கம். எல்லா குழுவினருக்கும் சம வாய்ப்பு அளிக்கும். அரசமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் வழங்கியிருக்கிறது. இந்த சுதந்திரத்தை குழிதோண்டி புதைக்கிற வகையில் தனது பெரும்பான்மை பலத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்தை பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிறது.

    மக்களவையில் 2019-ல் 303 உறுப்பினர்களை பெற்றிருக்கிற பா.ஜ.க.வில் ஒருவர் கூட சிறுபான்மை சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காத நிலையில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது? சிறுபான்மை சமுதாயத்தினர் பாராளுமன்றத்தில் நுழையக் கூடாது என்பதை பதுங்கு திட்டமாக வைத்து பெரும்பான்மை சமுதாயத்தை சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டுகிற பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா?

    முத்தலாக் மசோதாவை மக்களவையில் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்தது. ஆனால், மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்திருக்கிறது. இது எதிர்த்து வாக்களிப்பதை விட கொடுமையானதாகும். வெளிநடப்பு செய்வதன் மூலம் மறைமுகமாக பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க. உதவி செய்திருக்கிறது. ஆனால், வேலூர் மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களவையில் ஒரு நிலையையும், மாநிலங்களவையில் எதிர் நிலையையும் அ.தி.மு.க. எடுத்து இரட்டை வேடம் போட்டிருக்கிறது.

    அ.தி.மு.க. எப்படி இரட்டை தலைமையில் இயங்குகிறதோ, அதைப் போலவே முத்தலாக் மசோதாவிலும் இரட்டை வேடம் போட்டிருக்கிறது. இத்தகைய இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க.விற்கு உரிய பாடம் புகட்டுவதற்கு அருமையான வாய்ப்பு வேலூர் மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    மக்கள் பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டி உள்ளார்.
    ஆம்பூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து ஆம்பூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்நோக்கத்துடன் தேர்தல் நிறுத்தப்பட்டது.

    வேலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயம், குடிநீர் ஆதாரமான பாலாற்றில் கர்நாடக, ஆந்திர அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை கிடைக்காமல் செய்துள்ளன. தமிழகத்தின் எல்லை பகுதியில் சுமார் 222 கிலோ மீட்டர் ஓடும் பாலாற்றில் தமிழக அரசு தடுப்பணை கட்ட வேண்டுமென அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளன. அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை உயர்த்தி கட்டி வரும் பிரச்சினையை தடுக்க முடியாதவர்கள் ஆட்சியில் இருந்து என்ன பயன். எல்லா பிரச்சினைகளிலும் இரட்டை நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது. இரட்டை தலைமை கொண்ட கட்சியாக இருக்கலாம். அது அவர்கள் விருப்பம்.

    முத்தலாக் பிரச்சினையில் தேனி தொகுதி எம்.பி. மக்களவையில் ஆதரித்து பேசுகிறார். மாநிலங்களவையில் நவநீதருஷ்ணன் எதிர்த்து பேசுகிறார். புதிய கல்விக் கொள்கை, ஹைட்ரோகார்பன் திட்டம், 10 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றில் இரட்டை நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது.

    தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள், நலன்கள் மத்திய அரசால் பறிக்கப்படுகிறது. எனவே நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதை போல வேலூர் தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×