search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ‘திடீர்’ ஆலோசனை
    X

    அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ‘திடீர்’ ஆலோசனை

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.
    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது. 38 பாராளுமன்ற தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்தது.

    22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிவாகை சூடியதால் சட்டமன்றத்தில் அந்த கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் இம்மாதம் 3-வது வாரத்தில் சட்டமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தி.மு.க., காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று  ஆலோசனை மேற்கொண்டார். இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட வாரியாக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முறியடிப்பது எப்படி? என்பது குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். ஆட்சி தொடர்ந்து நடைபெறுவதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதுதொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு தற்போதே தயாராக இருக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகங்கள் அமைத்து செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நடந்தது.
    Next Story
    ×