search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக
    X

    மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக

    தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றிருக்கும் தே.மு.தி.க.வுக்கு அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க. போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

    கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷ் 3 லட்சத்து 21, 794 ஓட்டுகளும், விருதுநகரில் போட்டியிட்ட அழகர்சாமிக்கு 3 லட்சத்து 16,329 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    அதே நேரத்தில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட மோகன்ராஜ் ஒரு லட்சத்து 29,468 ஓட்டுகளும், திருச்சியில் போட்டியிட்ட இளங்கோவன் ஒரு லட்சத்து 61,999 ஓட்டுகளும் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளனர். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா என வலுவான கூட்டணியில் இருந்தும் தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.மு.க. 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.

    2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணியில் சேர்ந்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. படுதோல்வியை சந்தித்தது. கட்சி தலைவர் விஜயகாந்தும் தோற்றுப் போனார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வி என தொடர்ச்சியாக 3 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 2009-ல் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10.1 ஆக இருந்தது. தற்போது 2.19 சதவீதமாக சரிந்துவிட்டது. இதனால் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.


    2005-ம் ஆண்டு மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி கட்சி தொடங்கிய விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்தே தேர்தலை சந்திக்கும் என்றார். அதன்படி 2006 சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு 27 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகளை பெற்று அசத்தியது.

    விஜயகாந்தும் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். கட்சி தொடங்கிய ஒரு ஆண்டிலேயே தேர்தலை சந்தித்து 8.38 சதவீத வாக்குகளை பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    2009 பாராளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 10.3 சதவீதமாக அதிகரித்தது. அதன்பின் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 29 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. ஆனால் இந்த தேர்தலில் கட்சியின் ஓட்டு சதவிகிதம் 7.9 ஆக குறைந்தது. 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதோடு, வாக்கு சதவீதமும் 5.1 ஆக சரிந்தது. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று 104 தொகுதிகளில் போட்டியிட்டது.

    ஆனால் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு, ஓட்டு சதவீதமும் 2.39 ஆக சரிந்தது. அக்கட்சி வெறும் 16 லட்சத்து34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது.

    தற்போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதியிலும் தோற்றதோடு, வாக்கு சதவீதமும் 2.19 ஆக குறைந்துவிட்டது.

    மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் பதிவான வாக்குகள் 6 சதவீத ஓட்டுகளை ஒரு கட்சி பெற வேண்டும். ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும், அல்லது 6 சதவீத வாக்குகளையும் அல்லது 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர் இடங்களில் 3 சதவீத உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும்.

    ஆனால் தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றிருக்கும் தே.மு.தி.க.வுக்கு அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    Next Story
    ×