search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி
    X

    தமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி

    அ.தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

    ஆனால் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய மந்திரிசபையில் மோடி இடம் அளித்தார். இந்த தடவை தமிழகத்தில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்கள் ஒருவர் கூட இல்லை என்பதால் மத்திய மந்திரி சபையில் தமிழர்கள் இடம் பெறுவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    ஆனால் தமிழகத்தின் முக்கியத்துவத்தை கருதி தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாராவது ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கலாமா? என்று மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் தமிழக பா.ஜனதா தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிய வந்துள்ளது.

    அவரது அழைப்பின் பேரில் தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

    தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாருக்கு மத்திய மந்திரியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இல.கணேசன் கூறுகையில், “அதுபற்றி மோடிக்குதான் தெரியும். தமிழக பா.ஜனதா தலைவர்கள் ஒவ்வொருரையும் மோடி அறிந்து வைத்துள்ளார். எனவே அவர் சரியான முடிவு எடுப்பார்” என்றார்.


    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “பா.ஜனதா கட்டுக்கோப்பான அமைப்பாகும். மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்றார்.

    தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க.வுக்கு மேல்-சபையில் 13 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே அதற்கேற்ப முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களை மத்திய மந்திரியாக்கினால் அவர்களை எம்.பி.யாக்க வேண்டிய தேவையாகும். இதுகுறித்தும் மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார்.

    பாராளுமன்ற மேல்-சபையில் எம்.பி.க்களாக இருக்கும் கனிமொழி (திமு.க.), லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய 6 பேரின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிகிறது. விரைவில் அவர்களுக்கு பதில் புதிய 6 எம்.பி.க்களை தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய உள்ளனர்.

    தற்போது சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். தி.மு.க. கூட்டணியில் வைகோ மற்றும் காங்கிரசுக்கு (மன்மோகன்சிங்) தலா ஒரு இடம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

    அதுபோல அ.தி.மு.க.வில் ஒரு மேல்-சபை எம்.பி. இடத்தை கேட்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பா.ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×