search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு வெற்றி, இந்தியாவுக்கு தோல்வி - கே.எஸ். அழகிரி விமர்சனம்
    X

    மோடிக்கு வெற்றி, இந்தியாவுக்கு தோல்வி - கே.எஸ். அழகிரி விமர்சனம்

    பாராளுமன்ற தேர்தலில் ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. 40-க்கு 40 வெற்றி என்றோம், ஏறக்குறைய அதை செய்திருக்கிறோம். இந்த தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற ஒரு சித்தாந்தமும், மக்களை பிரித்து வைத்து ஆளும் ஒரு சித்தாந்தமும் போட்டியிட்டது.

    விந்திய மலைக்கு தெற்கே உள்ள மக்கள் ஒற்றுமையாக தேசத்தை பாதுகாக்க வாக்களித்து உள்ளனர். ஆனால் அந்த உணர்வு விந்திய மலைக்கு மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த தேர்தலில், ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’, இதைத்தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை.



    ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி இயல்பானது. ஆனாலும் தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதே என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள் கிறோம். அ.தி.மு.க. தவறான சித்தாந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வுடன் சென்றார்கள். பா.ம.க. உள்பட அவர்களுடன் கூட்டு சேர்ந்த அனைவருமே தவறான முடிவு எடுத்தார்கள். அதற்கான தண்டனையை பெற்றிருக்கிறார்கள். தென்னிந்திய மக்கள் பா.ஜ.க.வை ஏற்கமாட்டார்கள் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் அவர்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணி தலைமை, அவர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    முன்னதாக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
    Next Story
    ×