search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் முடிவு- திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X

    தேர்தல் முடிவு- திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

    ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. சார்பில் பணி அமர்த்தப்பட்டுள்ள முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் அவர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    வேலூர் தொகுதியை தவிர 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணும் பணியை மிகுந்த கவனமோடு கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கையை முறையாக கையாள வேண்டும் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.

    இதில் தி.மு.க. சார்பில் கனிமொழி பங்கேற்ற நிலையில் தமிழகத்தின் ஓட்டு எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன், வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதில் பங்கேற்ற ஓட்டு எண்ணும் மைய முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சீல் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் சீல் சரியாக உள்ளதா? என்பதை கட்சியினர் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சீல் சேதாரம் அடைந்தது போன்று காணப்பட்டால் அதில் பதிவான ஓட்டுகளை எண்ணவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மேற்கு மாவட்டம், தெற்கு மாவட்டம், மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    நாளை காலையில் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு தி.மு.க. முகவர்கள் 7 மணிக்கு முன்னதாகவே சென்றுவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பதிவான வாக்குகளும், எண்ணப்படும் வாக்குகளும் சரியாக இருக்கிறதா? என்பதை கவனமோடு கண்காணிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘எப்போதும் இல்லாத வகையில் கட்சியினருக்கு இந்த தேர்தலில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தில்லுமுல்லு நடக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஓட்டு எண்ணிக்கையின் போது தி.மு.க.வினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×