search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொறுப்பாளர்கள் முகாம்
    X

    4 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொறுப்பாளர்கள் முகாம்

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். #TNByPoll #DMK
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ளன. அ.ம.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் முன்னாள் எம்.பி., சுகுமார், திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், ஒட்டபிடாரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ், அரவக்குறிச்சியில் பி.எச்.சாகுல் அமீது போட்டியிடுகிறார்கள்.

    தி.மு.க.வில் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமி, ஒட்டப்பிடாரத்தில் மூக்கையா போட்டியிடுகிறார்கள். மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் யார் என்பது இன்று அறிவிக்க உள்ளனர்.

    இதில் தி.மு.க.வில் தொகுதி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என ஒவ்வொரு தொகுதிக்கும் 25 பேர்களை நியமித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், இதில் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலை பெற்று வீடுவீடாக வாக்காளர்களின் விபரங்களை சரிபார்த்து வருகின்றனர்.

    தொகுதியில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அணியின் மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சூலூர் தொகுதியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் பணி குறித்து சிறப்புரையாற்றுகிறார். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதியில் 27-ந் தேதியும், அரவக்குறிச்சியில் 28-ந்தேதியும், வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். #TNByPoll #DMK
    Next Story
    ×