search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல்- புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி

    மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வாக்களித்த பின்னர் தெரிவித்தார். #LoksabhaElections2019 #Narayanasamy
    புதுச்சேரி:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தின் வெற்றிக்காக கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து வெற்றிக்காக பாடுபட்டோம். சென்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு அமோக ஆதரவு இருந்தது.

    மோடியை பிரதமர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது. ஏனெனில் அவர் நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார். ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஓங்கி உள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பல்வேறு அரசு பதவிகளில் அலங்கரித்தவர். பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்த அவருக்கு அதிக அனுபவம் இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு மருத்துவ கல்லூரி உரிமையாளர் என்ற ஒரு தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லை.



    பாரதிய ஜனதா கூட்டணிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் எதிர்க்கட்சி தலைவர்களின் (கனிமொழி, துரைமுருகன்) வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தி உள்ளனர். மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரிடம் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளதே? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ரங்கசாமி பா.ஜனதா கூட்டணியில்தான் இடம் பெற்றுள்ளார். வருமான வரித்துறை யார் வசம் உள்ளது?

    2016-ம் ஆண்டு நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நடந்த போது எனது வீட்டில்கூட வருமான வரி சோதனை நடந்தது என்று தெரிவித்தார். #LoksabhaElections2019 #Narayanasamy
    Next Story
    ×