search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பானை பொங்கும் நேரம், விழிப்புடன் செயலாற்றுங்கள்- தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்
    X

    பானை பொங்கும் நேரம், விழிப்புடன் செயலாற்றுங்கள்- தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்

    தமிழகத்தில் தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயலாற்றும்படி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளனர். #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் அறிவித்துவிட்ட அந்த வினாடியில் தொடங்கி வெற்றிச் சான்றிதழை பெற்று கழகத்தின் தலைமையகத்தில் கொண்டுவந்து காணிக்கையாக்குவது வரை அயராது சுழன்று உழைக்கும் அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்களால் நிறைந்து வழியும் ஒரே நிகரற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அம்மா வழியிலான நல்லாட்சி தொடர்வதற்கும், தேசத்தின் பிரதமராக பாரத தேசத்தின் கறைபடாத காவலரான நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர்வதற்கும் வாய்ப்பு தாருங்கள் என்று மக்களையெல்லாம் சந்தித்து தேசத்திற்கான நன்மையை எடுத்துரைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் நமக்கு ஆதரவு பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோப்புப்படம்

    ஏழை, எளிய நடுத்தர மக்களை இமையாகக் காக்கும் பொறுப்புணர்வு என நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்த வண்ணம் நாட்டின் பிற மாநிலங்களும் நம்மையே பின்பற்றும் அளவுக்கு, கழக அரசு கொண்டு வரும் சாதனைகளை தமிழக மக்கள் உளமாற போற்றுகிறார்கள்.

    அதே வேளையில் சூழ்ச்சியையே பிழைப்பாகக் கொண்டு தகிடுதத்தங்களையே பொழுதெல்லாம் செய்து, நரித்தனங்களையே அட்டவணையாக்கி, பொய்யும், புரட்டுமே பொழுதாகக்கொண்டு மக்களை திசை திருப்ப வெறிகொண்டு அலையும் எதிர்க்கட்சிகளை நாம் விழிப்போடு இருந்து தடுத்திட வேண்டும்.

    தேர்தல் ஜனநாயகத்தில் கழகத் தொண்டர்களை மிஞ்சுவதற்கு இந்த காந்தி தேசத்தில் இணையில்லை என்பதனை மெய்பிக்கும் விதமாக, நாற்பத்தாறு வயது கட்சி, முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் முடிசூடி வழிநடத்துகிறது என்றால் கழகத் தொண்டர்களின் தேர்தல் பணிகள் எத்தகையது என்பதை உணர்த்தும் விதமாக, கூட்டணி இயக்கங்களின் தொண்டர்களோடு ஒற்றுமை அரண் அமைத்து ஒட்டுமொத்த வெற்றியை கொய்வதற்கு ஒன்றரைக் கோடி சிப்பாய் படையும் சத்திய பிரமாணம் மேற்கொள்ள வேண்டும்.

    கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் வாக்குகளை எண்ணி முடிவு அறிவிக்கும் வரை அங்கேயே மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து கடமை ஆற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். நமதருமை கழகக் கண்மணிகள் அனைவரும் இப்பணியில் விழிப்போடு செயல்பட்டால், நாளைய திருநாடும் நமதாகும். நாற்பது தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் வெற்றிகள் அனைத்துமே நமக்கென ஆகும் என்பது சத்தியம்.

    பானை பொங்குகிற நேரம். நம் பாசத்திற்குரிய தொண்டர்கள் செய்யும் கடமையில் உச்சக்கட்ட விழிப்புணர்வைக்கொண்டு செயலாற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

    18.4.2019 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு,  இரட்டை இலை சின்னத்திலும்; தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முறையே, தாமரை, மாம்பழம், முரசு, ஆட்டோ ரிக்சா, ஜக்கு சின்னங்களிலும் வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மாபெரும் வெற்றிபெறச் செய்யுமாறு  வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #LokSabhaElections2019 #OPS #EPS
    Next Story
    ×