search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் பிரதமரானால் தண்ணீர் கிடைக்காது - எடப்பாடி பழனிசாமி
    X

    ராகுல் பிரதமரானால் தண்ணீர் கிடைக்காது - எடப்பாடி பழனிசாமி

    ராகுல் கூறியபடி மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் ரூ.2000 கோடியில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காது என எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி, ஓசூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. குழப்பம் நிறைந்த கூட்டணி. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள ப.சிதம்பரம் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்குப்பிறகு யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம் எனக் கூறுகிறார். இப்படி முரண்பட்ட கருத்துடைய கூட்டணியால் நிலையான, உறுதியான ஆட்சியை எப்படி தரமுடியும்.

    இந்தியா முழுவதும் மாநிலக் கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    இந்த கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திர மோடிதான் பிரதமர் என அனைத்துக்கட்சிகளும் அறிவித்து மக்களிடத்திலே வாக்குகள் கேட்டு வருகின்றனர். நரேந்திரமோடி ஒருவரால் மட்டும் தான் ஒரு நிலையான ஆட்சியை தர முடியும்.

    தி.மு.க. கூட்டணியில் வைகோ கட்சியும் உள்ளது. இந்த கட்சியின் வேட்பாளர் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதாவது ஒருவர் ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றால் அவர் அந்த கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார் என்பது தான் அர்த்தம். இதுபற்றி வைகோ என்ன சொல்லப்போகிறார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறது ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்திலும் போட்டியிடுகிறது. இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சியின் கொள்கையை விட்டுத்தரக்கூடாது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் எதிரணியினர் குழப்பத்தில் தான் உள்ளனர்.

    கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டப்படும் என ராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். அவ்வாறு அணை கட்டப்பட்டால் ரூ.2000 கோடியில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் எப்படி ஒரு போதும் முதல்-அமைச்சராக முடியாதோ, அதே போன்று தான் இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி ஒரு போதும் வர முடியாது.

    கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்புத்திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களில் நீர் நிரப்புவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். பாராளுமன்ற தேர்தல் என்பது ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற தேர்தல். இந்த தேர்தலில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும்.

    மத்திய அரசின் மூலம் மாநிலத்தில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2021-ல் தான் தேர்தல் நடைபெறும்.

    ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஏதோ, தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கு தேர்தல் நடைபெறுவது போல எண்ணிக்கொண்டு, மாநில அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    நான் முதலமைச்சராக இருக்கும் போது ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்ற முடியும். வாக்காளர் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. ஒரு துரும்மைக் கூட கிள்ளிப் போடவில்லை.

    ஆனால் தி.மு.க. தான் காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுத்தது என பொய் பிரசாரம் செய்து வருகிறார் ஸ்டாலின். எந்த கட்சி காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இந்தப் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்து திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

    ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால் ரூ.2000 வழங்கும் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalanisamy
    Next Story
    ×