search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய அரசியல்வாதிகளை ஒழித்து தள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது- கமல்ஹாசன் பேச்சு
    X

    பழைய அரசியல்வாதிகளை ஒழித்து தள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

    தமிழகத்தில் பழைய அரசியல்வாதிகளை ஒழித்து தள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வேலூரில் கமல்ஹாசன் பேசியுள்ளார். #kamalhaasan #makkalneedhimaiam #tnpolitical

    வேலூர்:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுரேசுக்கு ஆதரவாக வேலூர் மண்டித்தெருவில் நேற்று இரவு பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கமல்ஹாசன் பேசியதாவது:-

    தமிழகத்தில் எங்கு சென்றாலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளேன். 4 வயது முதல் என்னை தோளிலும், மார்பிலும் சுமந்தது தமிழகம். மக்கள் நீதி மய்யத்தின் கூட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் கூட்டம் முடிந்த பின்னர் அப்பகுதியை தொண்டர்கள் சுத்தம் செய்வது வழக்கம். அதேபோன்று தமிழகத்தையும் சுத்தம் செய்வோம். நாங்கள் பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி வைத்திருக்கின்றோம். இளைஞர்கள், படித்தவர்கள் உங்களுக்காக உழைக்க தயாராகி விட்டார்கள்.

    பழைய அரசியல்வாதிகளை ஒழித்து தள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. பழையன கழிந்தே ஆகும், புதியன புகுந்தே ஆகும். அதேபோல் தமிழகத்தில் பழைய அரசியலும் ஒழியும். புதிய அரசியல் உருவாகும். காடுகளில் தீப்பிடித்தால் அதனை இயற்கை பார்த்து கொள்ளும் என்று சொல்லும் அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை. ஆபத்து நம்மை நோக்கி வருவதற்கு முன்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    உலகில் தண்ணீர் இல்லாமல் தவிக்க போகும் நகரங்களில் பெங்களூரு 2-வது இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுபோன்ற நிலை வேலூருக்கோ, தமிழகத்துக்கோ வரக்கூடாது. குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

    எங்கள் வேட்பாளரை வெற்றிபெறச்செய்தால் விவசாயிகள், சிறுவியாபாரிகள், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலையை ஒழித்து காட்டுவோம்.

    உங்களின் பணத்தை உங்களுக்கே இலவசம் என்ற பெயரில் தருவது இனிமேல் நடக்காது. 5 ஆண்டு வாழ்க்கையை பொதுமக்கள் 5 ஆயிரம் ரூபாய்க்காக விற்று விடாதீர்கள். மக்கள் நீதி மய்யம் அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கும். ஏழைகளை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது.

    ஒரேநாளில் எதுவும் நடக்காது தான். ஆனால் அதற்கான விதையை நாங்கள் விதைத்து விட்டோம். நாற்காலியின் நுனியில் உட்காராமல் உங்களுக்கான தேவைகளை கேட்டு வாங்கி வருவார்கள் எங்கள் வேட்பாளர்கள். நான் தேர்தலில் போட்டியிடாததால் பயந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். நான் பயப்படுபவனாக இருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன். என்னுடைய இலக்கு தமிழகம் தான். அரசியல் என் தொழில் அல்ல. நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பு. இனி என் எஞ்சிய காலம் தமிழக மக்களுக்காக தான்.

    சாராயத்தை உன்னதமான தொழிலாக எண்ணி அரசு அதனை நடத்தி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காமராஜர் கண்ட கனவுபோல் நாங்களும் கனவு காண துணிவோம். நமது சொத்தையே நமக்கு இலவசம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தருகிறார்கள். நோட்டாவிற்கு ஓட்டு போடாமல் நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். காவல்துறையை தங்கள் கடமையை செய்ய விட்டால் நிமிர்ந்து நிற்பார்கள். அரசியல்வாதிகள் காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மக்களின் ஏவல்துறையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kamalhaasan #makkalneedhimaiam #tnpolitical

    Next Story
    ×