search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்- தமிழிசை பேச்சு
    X

    மக்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்- தமிழிசை பேச்சு

    மக்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். #tamilisai #bjp #kanimozhi

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுகிறவர்களுக்குத்தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மாறாக கடைக்காரர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், பொருளாதாரத்தில் நலிவடைந்து முதுமையில் வாடினர். இவர்களின் துயரங்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, 60 வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.

    தமிழகத்திலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார். ஏழை-எளிய மக்களின் நலனில் அக்கறை கொள்கிற மத்திய-மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    பெரும்பாலானவர்கள் அரசியலில் இருந்து கொண்டு படிக்காமலே பல டாக்டர் பட்டங்களை பெறுவார்கள். ஒருவேளை டாக்டராக சரியாக படிக்காததால் தமிழிசை அரசியலுக்கு சென்று விட்டாரோ? என்று சிலர் கருதலாம். ஆனால் நான் அவ்வாறு இல்லை. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் சென்று படித்தேன். எனது மருத்துவமனையில் இரவு 2 மணி வரையிலும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தேன்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை கருவிலே சரி செய்யக்கூடிய படிப்பு படித்து உள்ளேன். என்னிடம் சிகிச்சைக்காக வருகிறவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து காத்திருந்து சிகிச்சை பெற்றனர். நான் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக பணி புரிந்தேன். நான் நினைத்து இருந்தால் சுயநலமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் நான் எனது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

    கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றியது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவது உறுதி. நாடு முழுவதும் தொழில்வளம் பெருக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இங்கு எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் முறைகேட்டால் திகார் ஜெயிலில் இருந்தவர். ஆனால் நான் என்றும் மக்களுக்கு சேவையாற்றுவதையே கடமையாக கொண்டுள்ளேன். நான் என்றும் இந்த மண்ணின் சொந்தக்காரிதான். என்றும் உங்களின் சகோதரிதான். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #bjp #kanimozhi

    Next Story
    ×