search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளை படத்தில் காணலாம்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளை படத்தில் காணலாம்

    கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.44 கோடி தங்ககட்டிகள் கருவூலத்தில் ஒப்படைப்பு

    கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.44 கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections #GoldSeized
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் தொகுதி பறக்கும்படை அலுவலர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள் புலிய குளம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவ்வழியாக வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் ஏராளமான துணிப்பைகளில் மொத்தம் 149 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருந்தது. வேனில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் தங்க கட்டிகளை மொத்தமாக வாங்கி பெரியகடைவீதி, டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைகடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இவற்றின் மொத்தமதிப்பு ரூ.44 கோடி ஆகும்.

    இதுகுறித்து வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட் ராம் தலைமையில் ஏராளமான நகைக்கடைக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

    இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. உரிய ஆவணங்களை காட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    149 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரணை நடத்தினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறி உள்ளது. இன்று காலை ஆவணங்களை கொண்டு வந்து காட்டுவதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு காட்டினால் ஆவணங்களை சரி பார்த்த பின்பு, முறையாக இருந்தால் தங்ககட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சூலூர் கரடிவாவி பகுதியில் இருந்து செலக்கரைசல் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் மகேந்திரன் மற்றும் அலுவலர்கள் வாகனசோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் கட்டுக் கட்டாக ரூ.56 லட்சம் இருந்தது தெரியவந்தது.


    வேனில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, செலக்கரைசல் பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்வதாக கூறினர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.56 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    சூலூர் பறக்கும்படை அலுவலர் சந்தோஷ்உதய ராகவன் தலைமையிலான அலுவலர்கள் சோமனூர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் காடா துணிகள் இருந்தது. விசாரணையில் அவை சோமனூர் லாரி அலுவலகத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு வழக்கமாக அனுப்பப்படுகிற காடா துணிகள் என்றனர். ஆனால் காடாதுணி பேல்களுக்கு முறையான இ-பில் இல்லை. இதையடுத்து காடாதுணிகளு டன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொண்டாமுத்தூர் பறக்கும்படை அலுவலர்கள் இன்று அதிகாலை சுகுணாபுரம் சோதனை சாவடியில் வாகனசோதனை செய்த போது அவ்வழியாக வந்த ஒரு மினிஆட்டோவை சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது.

    இதுகுறித்து ஆட்டோவில் இருந்த பாலக்காடை சேர்ந்த சேமையர் (வயது 22) என்பவரிடம் விசாரித்த போது வியாபார ரீதியாக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். அவரிடம் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections #GoldSeized
    Next Story
    ×