search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவை முந்துகிறாரா தினகரன்? - லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்து கணிப்பு
    X

    அதிமுகவை முந்துகிறாரா தினகரன்? - லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்து கணிப்பு

    அ.ம.மு.க. தலைவர் தினகரன் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வை முந்துகிறாரா? இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு எப்படி உள்ளது? என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #popularityof #TTVDinakaran #LSpolls
    சென்னை:

    சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

    இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது? என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

    பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் மார்ச் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்யப்பட்டது. 21 ஆயிரத்து 464 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளிலும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பண்பாடு மக்கள் தொடர்பகம் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு சென்னையில் இன்று வெளியிட்டார். 

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு தி.மு.க.- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக 49 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க.- பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 32 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் தமிழக இளைஞர்களில் 90 சதவீதம் பேர் பா.ஜனதா மீது எதிர்ப்புணர்வுடன் இருக்கிறார்கள். 4 சதவீத இளைஞர்கள்தான் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர்.

    பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று 55 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். 27 சதவீதம் பேர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று கூறியுள்ளனர். மத்திய அரசின் செயல்பாடு கடந்த 4½ ஆண்டுகளில் அதிருப்தி அளிப்பதாக 87 சதவீதம் பேரும், திருப்தி அளிப்பதாக 10 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் முதல்-அமைச்சராக யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அதிகபட்சமாக 31 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.சுக்கு 22 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். டி.டி.வி. தினகரனுக்கு 20 சதவீதம் பேர் ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு 24 சதவீதம் பேர் தி.மு.க.வுக்கு வாக்களிப்பேன் என்று கூறியுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 18.5 சதவீத பேரும், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 15 சதவீதம் பேரும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ராமதாசின் பா.ம.க.வுக்கு 2.7 சதவீதம் பேரும், பா.ஜனதாவுக்கு 1.37 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 2.20 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 2.18 சதவீதம் பேரும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 3.59 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்று 4 சதவீதம் பேர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழக மக்களின் பிரச்சினைகளை திறமையாக தீர்க்கும் கட்சியாக நீங்கள் எந்த கட்சியை பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பெரும்பாலான மக்கள் தி.மு.க.வை தேர்வு செய்துள்ளனர். தி.மு.க.தான் பிரச்சினைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பதாக 32.9 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.



    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வால்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று 26.21 சதவீதம் பேர் கூறியுள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கும் அந்த ஆற்றல் இருப்பதாக 20.25 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கமல்ஹாசன் பிரச்சினைகளை திறமையாக தீர்ப்பார் என்று 9 சதவீதம் பேர்தான் கூறியுள்ளனர்.

    தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நீடிப்பதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு பா.ஜனதாவின் தலையீடுதான் காரணம் என்று 59 சதவீதம் பேர் கூறியுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட ஆளுமை திறமையே காரணம் என்று 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

    டி.டி.வி.தினகரன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நன்றாக இருப்பதாக 69 சதவீதம் பேரும், மோசமாக இருப்பதாக 23 சதவீதம் பேரும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். ஜெயலலிதா இல்லாத நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு 70 சதவீதம் பேர் வரவேற்பு இல்லை என்று கூறியுள்ளனர். 26 சதவீதம் பேர்தான் இரட்டை இலைக்கு வரவேற்பு இருக்கும் என்று கூறியுள்ளனர்.

    அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 35.75 சதவீதம் பேர் ராகுல் பிரதமராக வரவேண்டும் என்று கூறியுள்ளனர். நரேந்திர மோடியை 27.9 சதவீதம் பேர் மட்டுமே ஆதரித்துள்ளனர்.

    மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் ஆகலாம் என்று 7.1 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பிரியங்காவை பிரதமர் ஆக்க வேண்டும் என்று 4.4 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜிக்கு 4.22 சதவீதம் பேரும், மாயாவதிக்கு 3.1 சதவீதம் பேரும், தேவே கவுடாவுக்கு 3 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் அதற்கு என்ன காரணங்கள் இருக்கும்? என்று ஒரு ஆய்வு செய்யப்பட்டது. காவிரி நீர் பிரச்சினை, ஜி.எஸ்.டி. விவகாரம், வேலைவாய்ப்பின்மை, புதிய கல்வி கொள்கை, மாட்டு இறைச்சி தடை, ஸ்டெர்லைட் விவகாரம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தோல்விக்கு காரணங்களாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மதரீதியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சதவீதம் ஆதரவு கிடைக்கும்? என்று நடத்தப்பட்ட ஆய்வில் தி.மு.க.வுக்கு இந்துக்களின் வாக்குகளில் 49 சதவீதம், கிறிஸ்தவர்களின் வாக்குகள் 46 சதவீதம், இஸ்லாமியர்களின் வாக்குகளில் 44 சதவீதம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க.வுக்கு இந்துக்களின் 37 சதவீதம், கிறிஸ்தவர்களின் வாக்குகளில் 36 சதவீதம், இஸ்லாமியர்களின் வாக்குகளில் 39 சதவீதம் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இலவச திட்டங்கள் தேவையில்லை என்று 79 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது? என்று நடத்தப்பட்ட ஆய்வில் தி.மு.க. கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    திருவள்ளூர், வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 27 தொகுதிகளில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. டிடி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தேனி, திருச்சி ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருப்பூர், நாகை, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 8 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிப்பதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இறுதியில் தி.மு.க. கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பும், அ.தி.மு.க. கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பும், தினகரன் கட்சிக்கு ஒன்று அல்லது 2 இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக் கப்பட்டுள்ளது.

    18 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அ.தி.மு.க.வுக்கு 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    தினகரன் கட்சிக்கு 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது. 2 தொகுதிகளில் கணிக்க முடியாத நிலை உள்ளது என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தற்போதைய தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழை வாக்காளர்கள் மத்தியில் பணம் தருபவர்களுக்கு வாக்களிக்கலாம் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இது வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி உள்ளது.

    மற்றபடி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. என்றாலும் தி.மு.க.-அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள விவசாயக் கடன் தள்ளுபடி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    அ.தி.மு.க.வின் பொங்கல் பரிசான ரூ.1000 பரிசு திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இது எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் இடையே நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கி உள்ளது.

    தற்போதைய அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் மின் தடை நீக்கம், ரே‌ஷன் விநியோகம், நல்ல திட்டங்கள் செயலாக்கம், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றில் அ.தி.மு.க. சிறப்பாக செயல்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    காவிரி ஆணையம் அமைவதற்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்று 28 சதவீதம் பேரும், சுப்ரீம் கோர்ட்டு காரணம் என்று 41 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். நீட் கல்வி திட்டத்துக்கு தமிழ்நாட்டில் 49 சதவீதம் பேர் ஆதரவு இல்லை என்றும், 37 சதவீதம் பேர் ஆதரவு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறதா? என்ற கேள்விக்கு 59 சதவீதம் பேர் இல்லை என்றும், 25 சதவீதம் பேர் நிறைவேற்றி உள்ளதாகவும் கருத்து கூறியுள்ளனர். #popularityof #TTVDinakaran #LSpolls
    Next Story
    ×