search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி வீட்டில் சோதனை நடத்த தயாரா?- ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
    X

    மோடி வீட்டில் சோதனை நடத்த தயாரா?- ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

    கோடி கோடியாக பணம் உள்ளதால் மோடி வீட்டில் சோதனை நடத்த தயாரா? என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார். #mkstalin #pmmodi #dmk

    ஈரோடு:

    ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் திமுக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரசின் தேர்தல் அறிக்கையை கண்டு மோடி இப்போது பயந்து போய் இருக்கிறார். காங்கிரஸ் அறிக்கை பொய்யான அறிக்கை என்கிறார் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து மீட்போம் என்று சொன்னீர்களே... செய்தீர்களா?  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று சொன்னீர்கள் செய்தீர்களா? அட்லீஸ்ட் 15 ரூபாய் ஆவது போட்டீர்களா? 

    கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொன்னீர்கள் ஆனால் நல்ல பணத்தை அல்லவா ஒழித்தீர்கள் இப்படி வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியவர் தானே இந்த மோடி? இதை நினைக்கும்போது எனக்கு ஒரு சினிமா பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது. "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'' அதை மாற்றி "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே''என்று பாடலாம்.

    நம்மைப் போல் இப்போது எடப்பாடியும் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் போது கைகட்டி குனிந்து நின்ற அவர் இப்போது எம்ஜிஆரை போல் கழுத்தில் துண்டு எல்லாம் போட்டு பேசுகிறார். எடப்பாடியை பார்த்து நான் கேட்கிறேன் "தமிழக மக்களுக்காக என்ன செய்தீர்கள்? நாட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தது உண்டா? இதனால் என்ன ஆச்சு? மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், இப்படி 35 ஆயிரம் போராட்டம்  நடந்ததாக நீங்களே சொல்கிறீர்கள். 

    இதையெல்லாம் சமாளித்து உள்ளோம் என்கிறீர்கள். இப்படி சொல்ல வெட்கமா இல்லையா? இது பெருமைக்குரிய விசயமா? ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றீர்களே? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எடப்பாடி ஆறுதல் சொல்லி இருப்பாரா? நேரில் போய் பார்த்தாரா? கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினாரா? 

    மோடி கையில் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் எடப்பாடி. மோடிக்கு இந்தியாவைப் பற்றி கவலை இல்லை அவர் வெளிநாடு வாழ் பிரதமராக அல்லவா இருக்கிறார். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கடந்த சில நாட்களாக மோடி நம் மீது மிகவும் கோபமாக இருக்கிறார். அதற்கு மூன்று காரணம்.


    ஒரு காரணம் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் என்று நான் சொன்னது. இரண்டாவது காரணம்.. இந்தியா முழுவதும் நடந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் தி.மு.க அணி அமோக வெற்றி பெறும் என்று சொன்னது. மூன்றாவது காரணம்... நான் பேசும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று ரிப்போர்ட் அவருக்கு போனது. இப்படி மூன்று காரணத்துக்காக நம் மீது மோடிக்கு கோபம். அதன் விளைவு தான் நமது முன்னணி தலைவர் துரைமுருகன் வீட்டில் சோதனை. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

    அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து சில வீடுகளில் பணம் பறிமுதல் செய்தார்களாம். இவர்களே பணத்தை வைத்து விட்டு இவர்களே எடுத்து இருப்பதாக நான் கருதுகிறேன். நான் எதிர்க்கட்சித் தலைவர். முதல்வருக்கு இணையாக.. அது கூட வேண்டாம்.. ஒரு அமைச்சர் அந்தஸ்தில் இருக்கிறேன். நான் புகார் கொடுக்கிறேன். மோடி வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. எடப்பாடி வீட்டிலும் பணம் குவிந்திருக்கிறது. அங்கு சென்று சோதனை நடத்துங்கள் போடுவீர்களா சோதனை? தேர்தல் கமிசன் வாகனங்களை நிறுத்தி சோதனை போட செய்துள்ளது. போடுங்கள் அது தேர்தல் விதிமுறை. அதேபோல் போலீஸ் வேன்களையும், போலீஸ் வாகனங்களையும் சோதனை செய்யுங்கள். ஆளுங்கட்சிக்காக போலீஸ் வாகனத்தில் பணம் கடத்தப்படுகிறது. இதை தேர்தல் துறை சோதனை போடாவிட்டாலும் எங்களின் இளைஞர் படை சோதனை நடத்தும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #pmmodi #dmk 

    Next Story
    ×