search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1 லட்சம் வரை செலவு செய்து மலேசியாவில் இருந்து வாக்களிக்க சொந்த ஊர் வந்த தொழிலாளர்கள்
    X

    ரூ.1 லட்சம் வரை செலவு செய்து மலேசியாவில் இருந்து வாக்களிக்க சொந்த ஊர் வந்த தொழிலாளர்கள்

    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட 3 ஆயிரம் கி.மீ. கடல் கடந்து ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து 2 பேர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர். #LokSabhaElections2019
    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி, பள்ளி மாணவர்களும் விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒரு ஓட்டு போட 3 ஆயிரம் கி.மீ. கடல் கடந்து ஒரு லட்சம் செலவு செய்து 2 பேர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மங்கள நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பாரூக் (வயது 46), அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேக் இஸ்மாயில் (43). இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதேபோல் இன்னும் சில நாட்களில் சுமார் 50 பேர் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வருகை தருகிறார்கள். இதில் முகமது பாரூக் தனது முதல் ஓட்டை 1991-ல் பதிவு செய்தார். பிறகு 1995-ல் வெளிநாடு சென்ற பிறகு ஒவ்வொரு பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலுக்கும் சொந்த ஊருக்கு வந்து வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    முகமது பாரூக்

    தற்போது 17-வது பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். வாக்களித்த மறுநாளே அவர் மலேசியா செல்கிறார்.

    என் தந்தை வெளிநாட்டில் இருக்கும்போது ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வீட்டுக்கு தகவல் கொடுப்பார். தவறாமல் வாக்களிக்க வருவார். நான் 1991-ல் என் முதல் வாக்கை பதிவு செய்தேன். 1995-ல் பிழைப்புக்காக மலேசியா சென்றாலும் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஊருக்கு வந்து ஓட்டுப் போட்டுவிட்டு போவேன்.

    இது ஜனநாயக கடமை. நான் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு வந்து செல்லும் போதெல்லாம் நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். ஒரு மாத சம்பளம் இழப்பு, 35 ஆயிரம் டிக்கெட் செலவு. இப்படி ஒரு லட்சம் வரை செலவு செய்து போய் ஒரு ஓட்டு போடணுமா என்பார்கள்.

    நான் அவர்களிடம் சொல்வதெல்லாம் நம் உரிமை அது. ஒருமுறை ஓட்டுப் போடவில்லை என்றால் பட்டியலில் பெயரை நீக்கிவிடுவார்கள். அப்புறம் நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதனால் தான் பஞ்சாயத்து தேர்தல் வரை அத்தனை தேர்தலுக்கும் ஓட்டுப்போடுறேன். எனக்கு ஒரு லட்சம் செலவை விட ஒரு ஓட்டு முக்கியம்.

    முன்பெல்லாம் தேர்தலுக்கு நான் ஊருக்கு வரும் போது கிராமங்களில் கொடி, தோரணங்கள், வீட்டு சுவர்களில் சின்னங்கள் இருக்கும். வீதிக்கு வீதி விளம்பர வாகனங்கள் வந்து செல்லும். அதையெல்லாம் பார்க்கும் போது திருவிழா போல இருக்கும். ஆனால் தற்போது தேர்தலுக்கான அறிகுறியே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    Next Story
    ×