search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த ஏஜெண்டுகளுக்கு தடை
    X

    வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த ஏஜெண்டுகளுக்கு தடை

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. #LSPolls
    திருச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளை தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அதன்படி வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து தேர்தல் கமி‌ஷன் விதிமுறைகள் குறித்து திருச்சியை சேர்ந்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது :-

    பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட எல்லா வேட்பாளர்களின் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மட்டுமே தங்கள் செல்போன்களை பயன்படுத்தலாம்.

    அவர்கள் செல்போனை தேர்தல் அதிகாரிகள் எந்த நேரமும் தொடர்பு கொள்வார்கள். அதே சமயம் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தங்கள் தேவைகளுக்கு உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுடன் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும். வெளிநபர்களோ அல்லது வெளிநபர்களுக்கோ இந்த செல்போனில் இருந்து தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த செல்போன் எப்போதும் ஆன் செய்து இருக்க வேண்டும். வேறு செல்போன்களுக்கு வாக்குச்சாவடியில் கட்டாயமாக அனுமதியில்லை.

    அதே சமயம் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப் பதிவை கண்காணிக்கும் திட்டத்தை தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அதன் படி வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் எஸ்.எம்.எஸ். குறியீடுகள் கொண்ட அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கு முன்பாகவே வழங்கப்படும்.

    இந்த திட்டம் மூலம் வாக்குச்சாவடியின் செயல்பாடு குறித்த ஒவ்வொரு விவரமும், அதாவது முதல் நாள் வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடியை சென்றடைதல், வாக்குப்பதிவு பொருட்கள் சென்றடைதல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், ஒவ்வொரு நேரத்துக்கும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வாக்குப் பதிவு விவரம் தெரிவித்தல், முக்கிய நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் மற்றும் வாக்குப்பதிவு நிறைவடைதல் ஆகியவற்றை குறிப்பிட்ட குறியீட்டின் மூலம் வாக்குப் பதிவு தலைமை அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    எஸ்.எம்.எஸ். முறையில் பயிற்சி பெற ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள வெப் கேமிரா ஆபரேட்டர் இருந்தால் அவரது உதவியுடன் தகவல்களை தெரிவிக்கலாம். அதனால் வாக்குச் சாவடி அலுவலர்கள் எஸ்.எம்.எஸ். தகவல் முறையை நன்கு அறிந்து கொண்டு அதற்குரிய வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #LSPolls
    Next Story
    ×