search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள் - திமுக கூட்டணி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
    X

    ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள் - திமுக கூட்டணி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

    சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து, ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள் என்று தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டி உள்ளார். #OPanneerSelvam #ADMK #DMK
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து, திருவெறும்பூரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்று, எம்.பி.யாக பதவியேற்றவுடன், திருச்சி மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினார். ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எந்த உருப்படியான திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து, ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள்.

    கடந்த 1972-ம் ஆண்டு கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே 4 அணைகள் கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நதி நீர் குறைந்து விட்டது. இப்பிரச்சினையை தீர்க்க 17 ஆண்டு காலமாக காவிரி நடுவர் மன்றம் விசாரித்தது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.

    அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால் 2011-ம் ஆண்டு அவர்களது ஆட்சி முடியும் வரை நடக்கவில்லை. அதன்பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.



    கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிவிடுவேன் என்று கூறி கலர், கலராக உடைகளை அணிந்து, கரும்பு தோட்டத்தில் சிமெண்டு சாலை போட்டு நடந்து சென்றார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. தற்போது அவர்கள் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் டீக்கடையே நடத்தியவர்கள்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தமிழ்நாட்டையே கொளுத்திவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர்கள்தான் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தியவர்கள். வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட கட்சி தி.மு.க.தான். அவர் தமிழக முதல்-அமைச்சர் ஆனால் தமிழகத்தின் நிலைமையை எண்ணிப்பார்க்க முடியுமா?. இந்த தேர்தலுடன் அ.தி.மு.க.வின் கதை முடிந்து விடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த தேர்தலின் முடிவுக்கு பின்னர் யார் கதை முடியப்போகிறது என்பது தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #OPanneerSelvam #ADMK #DMK 
    Next Story
    ×