search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் வழக்கு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
    X

    ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் வழக்கு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

    தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 1,601 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 1,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக 519 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை ரூ.46.29 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், ரூ.69.03 கோடி மதிப்புள்ள 212.5 கிலோ தங்கம், 327.5 கிலோ வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரூ.21.23 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பிடிபட்டுள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரூ.25.05 கோடியும், ரூ.51.83 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டு இருந்தன. 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.113 கோடி கைப்பற்றப்பட்டு இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஷிப்டுக்கு தலா 702 பறக்கும்படை வீதம் மூன்று ஷிப்ட் பணியில் ஈடுபட்டு இருக்கும். அந்தவகையில் நாளொன்றுக்கு 2,106 பறக்கும்படை பணியில் ஈடுபடுகின்றன.

    தமிழகத்தில் உரிமம் பெற்றுள்ள 21 ஆயிரத்து 999 துப்பாக்கிகளில் 19 ஆயிரத்து 607 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பாதுகாப்புக்கு தேவைப்படுவதால் சில துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை.

    சி விஜில் செல்போன் செயலி மூலம் 1,106 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் உண்மைத்தன்மையுள்ள 357 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இறுதி வாக்காளர் பட்டியல் தயாராகும் 29-ந் தேதி மாலை 3 மணிக்கு பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு, சின்னம் வழங்கப்படும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் அது ஒதுக்கப்படும்.

    அ.ம.மு.க.வுக்கு பொதுவான சின்னம் வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இதுபற்றிய அறிவுரையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தோம்.

    அதற்கு, தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை காத்திருங்கள் என்று கூறியிருக்கின்றனர். இந்த தகவலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் தெரிவித்து இருக்கிறோம். எனவே தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வந்தவுடன் அதை செயல்படுத்தும்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவோம்.

    தமிழகத்தில் குக்கர் சின்னத்தை அ.ம.மு.க. தவிர வேறு சுயேச்சை யாரும் கேட்டாலும் அதை அவருக்கு ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.



    ஓட்டுக்காக பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். எனவே இரண்டு குற்றமும் வழக்காக பதிவு செய்யப்படும்.

    தமிழகத்தில் 3.5 லட்சம் ஊழியர்களுக்கு தேர்தல் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்படும் போது அந்த இடங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். அதில் அவர்கள் தபால் ஓட்டுகளைப் போடுவார்கள். இரண்டாம் கட்ட பயிற்சிக்கான தேதியை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்வார். மூன்றாம் கட்ட பயிற்சி முடிந்ததும், அவர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியின் முகவரியைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்வார்கள்.

    கூட்டுறவு சங்க பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறையிடம் இருந்து விளக்கம் கேட்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    Next Story
    ×