search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் - உதயநிதி ஸ்டாலின்
    X

    மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் - உதயநிதி ஸ்டாலின்

    மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். #LSPolls #UdhayanidhiStalin #mkstalin

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பெள்ளாச்சியை அடுத்த வடசித்தூர், நெகமம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் எனக்கூறிய மோடி மக்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டார். 500, 1000 நோட்டுகள் செல்லாது என பண மதிப்பிழப்பு செய்தார். புதிய இந்தியா உருவாகும் என்று கூறினார். ஆனால் ஏதும் நடக்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எழுச்சி காணப்படுகிறது.

    மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள். தற்போது தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது. தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து, ஏழை மாணவர்கள் கல்விக்கடன், விவசாயக்கடன் போன்றவை ரத்துசெய்யப்படும். மாணவர்களுக்கு இலவச ரெயில்சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


    அ.தி.மு.க.வை மிக மோசமாக விமர்சனம் செய்த பா.ம.க. வெட்கமில்லாமல் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. உலகத்தரம் வாய்ந்த நெகமம் சேலைகளுக்கு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி நீக்கப்படும். கைத்தறி பூங்கா அமைக்கப்படும். விவசாய பகுதி என்பதால் விவசாய பொருட்கள் வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொள்ளாச்சி நாலுமூலை சுங்கம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது-

    நான் கருணாநிதி பேரனாகவும், மு.க.ஸ்டாலின் மகனாகவும் உங்களிடம் வந்து உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்கிறேன். மத்தியில் நல்லாட்சி மலர உதய சூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்.

    மோடியையும், எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்புவோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

    மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய நலன் கருதி ஆனைமலை-நல்லாறு திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உடுமலை அருகே உள்ள பெதப்பம் பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, மோடி கருப்பு பணத்தை ஓழிப்பேன், பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்றார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக புல்வாமாவில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.  #LSPolls #UdhayanidhiStalin #mkstalin

    Next Story
    ×